விதைப்பு இயந்திரம் கண்டுபிடிப்பு… இளம் விவசாயி சாதனை!

விவசாயம்
விதைப்பு இயந்திரம் கண்டுபிடிப்பு…
இளம் விவசாயி சாதனை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த காரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. வயது 25. இவரது தந்தை சிங்காரவேல் விவசாயி. தாய் பூங்கொடி. தட்சிணாமூர்த்தி எம் ஐ டி பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் தந்தைக்கு உதவியாக விவசாய பணியிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத காரணத்தால் அவருக்கு உதவிட விதை விதைக்கும் கருவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதற்காக வீட்டிலிருந்த பழைய மோட்டார் சைக்கிளின் எஞ்சின், சக்கரம், கைப்பிடி உள்ளிட்டவைகளைக் கொண்டு பெட்ரோலால் இயங்கக்கூடிய நவீன விதைப்பு இயந்திரத்தை பெரும் முயற்சிக்குப் பிறகு கண்டுபிடித்து உள்ளார். இந்த நவீன இயந்திரம் மூலம் கம்பு சோளம் ராகி போன்ற தானியங்களை கொட்டி வைத்து வயலில் விதைப்பு பணியிலும்  ஈடுபட்டு வருகிறார்.

எப்படி வந்தது இந்த புதிய கண்டுபிடிப்புக்கான எண்ணம்? தட்சிணாமூர்த்தியிடம் கேட்டோம்:

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

“தற்போது கிராமப்புறங்களில் விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலானவர்கள் 100 நாள் வேலைக்கு சென்று விடுகின்றனர். அப்படியே வந்தாலும் கூலி ஆட்கள் பணி செய்ய நாளொன்றுக்கு 500 ரூபாய் கூலியாக கொடுக்க வேண்டியுள்ளது. மானாவாரி விதைப்புக்கு கூலி கொடுத்து விவசாயம் செய்தால் விவசாயிகளுக்கு இழப்புதான்  ஏற்படும். இந்த நிலையைக் கவனித்ததால் கால விரயத்தையும் செலவையும் மிச்சப்படுத்த விதைப்பு  இயந்திரத்தை தயாரிக்க முயன்றேன்.

ஏற்கனவே நடவுக்கும் உழவுக்கும் இயந்திரங்கள் உள்ளன. தற்போது விதைப்புக்கு நான் கண்டுபிடித்த இந்த இயந்திரம் விவசாயிகளுக்கு நல்ல பலனைத் தரும். தற்சமயம் வேளாண்துறை இயந்திர மயமாக்கல் பயிற்சியை வழங்கி வருகிறது. எனது கண்டுபிடிப்பில் சில மாற்றங்களுடன்  இன்னும் விதைப்பை எளிமையாக்க உதவுவேன்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.  

இந்த நவீன விதைப்பு இயந்திரத்தை கண்டுபிடிக்க ரூபாய் ஐந்தாயிரம் செலவானதாக கூறுகிறார்.

இந்த இளைஞர் ஏற்கனேவே பெட்ரோலுக்குப் மாற்றாக கால்சியம் கார்பைட் கலந்த நீரில் இயங்கும் இரு சக்கர வாகனத்தையும், நீரில் நடந்து செல்ல உதவியாக மிதவை மிதியடியையும், நீரிலும் நிலத்திலும் பயன்படுத்தக்கூடிய இருசக்கர் வாகனத்தையும் கண்டுபிடித்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். தன் கண்டுபிடிப்பு களுக்கு தான் படித்த மேட்டூர்  எம் ஐ டி கல்லூரி மிகப்பெரும் ஊக்கம் தந்ததாக நன்றியுடன் நினைவுக் கூறுகிறார். இவர் போன்ற சமூகஅக்கறையுள்ள இளைஞர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அரசும் ஆதரவு தந்தால் நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com