இது தமிழ்நாடா அல்லது வட மாநிலமா? - கொதிக்கும் வேல்முருகன்!
"தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வரும் வடமாநிலத்தவர்களால் குற்றங்கள் அதிகரித்து வருவதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல முறை சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாது, தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பது, அரசுக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும் என வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களைப் புறக்கணித்து, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 90 சதவிகிதத்திற்கு மேல் பணியில் அமர்த்துகிறார்கள். தினந்தோறும் ஆயிரக் கணக்கில் வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு படையெடுக்கிறார்கள்.
சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் உள்ள நிறுவனங்களில் அமைப்புச்சாரப் பணிகளிலும், வெளிமாநிலத்தவர்களே பெருமளவில் வேலை செய்கிறார்கள்.
இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக இருக்காது. இந்திக்காரர்களின் மாநிலமாகவோ, கலப்பின மண்டலமாகவோ மாறிவிடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
நாகலாந்து, அருணாச்சலபிரதேசம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், வெளிமாநிலத்தவர்கள் சென்று தங்க, அம்மாநிலங்களின் உள் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இந்த சட்டம் தமிழ்நாட்டிற்கும் வேண்டும் என்கிறோம்.
இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் அடுத்துள்ள அனுப்பர்பாளையத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை, வட மாநில தொழிலாளர்கள் ஓட ஓட விரட்டியதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்துகிறது.
இது தமிழ்நாடா அல்லது வடமாநிலமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாது, தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பது, அரசுக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, வட மாநிலத்தவர்களின் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது தாக்குல் நடத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழர்கள் ஒன்று சேர்ந்து, எதிர் தாக்குதல் நடத்தினால், தமிழ்நாடு கலவர பூமியாக மாறும் என்பதை கவனத்தில் கொண்டு, குற்றச்செயலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களை கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மேலும், அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற கடந்த 9 ஆண்டுகளில் இத்தகைய வடவர் திணிப்பு இலட்சக்கணக்கில் பலமடங்கு வீரியமாக அதிகரித்துள்ளது. இது, எதிர்காலத்தில், தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் முயற்சி என்பதோடு, இந்துத்துவத்தைத் தமிழ் மண்ணில் விதைத்து, தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறும்.
இவ்வாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது என வேல்முருகன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.