கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம் - இரண்டு வாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை அறிக்கை தாக்கல்! ஸ்ரீமதியின் தாயார் ஏற்றுக்கொள்வாரா?

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம் - இரண்டு வாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை அறிக்கை தாக்கல்! ஸ்ரீமதியின் தாயார் ஏற்றுக்கொள்வாரா?

கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீமதியின் இறப்பு பற்றிய சி.பி.சி.ஐ.டி விசாரணை நிறைவடைந்திருக்கிறது. இரண்டு வாரங்களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிய வந்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த ஆண்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு, ஏராளமானவர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் கலவரத்தில் முடிவடைந்தது.

பள்ளி வளாகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக 4 பிரிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் 407 ஆண்கள், 2 பெண்கள், 27 சிறுவர்கள் உட்பட 436 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தார்கள்.

வழக்கு விசாரணை முடிவில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை கைது செய்தனர். பின்னர் வழக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் ஆரம்பம் தொடங்கி, ஸ்ரீமதி குடும்பத்தினர் ஒத்துழைக்க மறுப்பதாக செய்திகள் வந்தன.

இறந்து போன மாணவியின் செல்போனை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்க அவரது தயார் மறுத்துவிடவே, சிபி.சி.ஐ.டி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. விசாரணையை ஒத்துழைக்கும்படியும், மாணவி பயன்படுத்திய செல்போனை உடனே சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் பெற்றோர்களுக்கு உத்தரவிட்டது.

ஏகப்பட்ட நினைவூட்டல்களுக்கு பின்னரும் சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்க தயங்கி குடும்பத்தினர், ஒருவழியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க முன்வந்தார்கள். அதை ஏற்றுக் கொள்ள நீதிமன்றம் மறுக்கவே, விழுப்புரம் சி.பி.சி.ஐடி அலுவலகத்தில் செல்போனை ஒப்படைத்ததார்கள். அதைத் தொடர்ந்து விசாரணை சூடு பிடித்தது.

சி.பி.சி.ஐ.டி விசாரணை மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஸ்ரீமதியின் தாயார் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து அரசுத் தரப்பு விளக்கம் கோரப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும், இன்னும் ஒரிரு வாரங்களில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் அரசு வழக்கறிஞர் தரப்பிலிருந்து விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

விசாரணை வெளியாகும்போது பல உண்மைகள் வெளிவரும என்று தெரிகிறது. ஸ்ரீமதியின் தாயார், விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்கிறாரா என்பதே ஊடகங்கள் விவாதிக்கப்போகும் முக்கிய கேள்வியாக இருக்கப் போகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com