கனியமூர் சக்தி மெட்ரிக் பள்ளி 182 நாட்களுக்குப் பிறகு திறப்பு! சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

கனியாமூர் தனியார் பள்ளி
கனியாமூர் தனியார் பள்ளி

கனியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளியை திறப்பதற்கு அனுமதி அளித்தது.

சேதமடைந்திருந்த பள்ளி வழக்கம் முழுவதும் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், தமிழக அரசு அமைத்த குழு அதனை ஆய்வு செய்து விட்டதாகவும், மாணவ, மாணவிகளின் நலன் கருதி அந்தப் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி வேண்டும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 5 வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், மாணவ மாணவிகளின் கற்றல் திறன் பாதிக்காத வகையில் நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

high court
high court

ஏற்கனவே எல்கேஜி முதல் நான்காம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி அன்று, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற பிளஸ் டூ மாணவி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து 17-ஆம் தேதி வன்முறை வெடித்து போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்குள் புகுந்து சூறையாடி பள்ளி பேருந்துகளையும் தீ வைத்து எரித்து நாசப்படுத்தினர்.இதன் காரணமாக கடந்த 145 நாட்கள் பள்ளி இழுத்து மூடப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை கடந்த டிசம்பர் மாதம் 5- ஆம் தேதி தேதியில் இருந்து நேரடி வகுப்புகள் தொடங்கலாம் என உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு ஏற்கனவே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி அந்தப் பள்ளியை திறக்க வேண்டும், ஆன்லைனில் மாணவ மாணவிகள் படிப்பதால் அவர்களின் கற்றல் திறன் பாதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட நிர்வாகத்திடம் பள்ளி திறப்பதற்கான அனுமதியை கேட்டனர். பள்ளியில் சுமுகமான சூழ்நிலை நிலவுதாலும், மாணவர்களின் நலன் கருதி பள்ளியை திறக்கலாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளியை திறப்பதற்கு நேற்று அனுமதி அளித்தது.

இதனால் மாணவ மாணவிகள் 182 நாட்களுக்குப் பிறகு வழக்கம்போல் பள்ளிக்கு வந்து வகுப்புகளில் படித்து வருகின்றனர் . மேலும் 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது போல், எல்கேஜி முதல் நான்காம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை நீதிமன்றம் பள்ளி வளாகத்தில் காவல்துறையினர் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், அவர்கள் காக்கி உடையிலேயே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com