
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி முதல் பெரியவிளை வரையிலான கடல் பகுதி திடீரென பச்சை நிறமாக மாறியதையடுத்து அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல் பகுதியான மணவாளக்குறிச்சி முதல் பெரியவிளை வரையில் கடல் நீர் திடீரென பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. மேலும், துர்நாற்றமும் வீசி வருகிறது. பொதுவாக இது ஆழ்கடல் பகுதி என்பதால் மற்ற கடல் பகுதிகளை விட கடல் அலைகள் சற்று சீற்றமாகவே காணப்படும்.
தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இந்த பகுதியில் காற்றின் வேகமும் அதிகரித்து காற்றின் வேகத்தால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த பகுதியில் எழும்பும் கடல் அலைகள் பச்சை நிறத்தில் காணப்படுவதோடு நுரையுடன் கரையில் மோதி வருகிறது.
அத்துடன் குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் அக்கடல் பகுதியில் உள்ள மீன்களும் உயிரிழக்க கூடும் என மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
‘’பொதுவாக கடலில் உள்ள பூங்கோரை பாசிகளால் சில சமயம் கடல் நீர் பச்சை நிறமாக காட்சியளிக்கும்.. இதனால் சிறிய வகை மீன்களின் செதில்கள் பாதிப்படைந்து உயிரிழக்க கூடும். ஆனால், அரபிக்கடல் போன்ற ஆழ்கடல் பகுதிகளில் இதுபோன்ற பூங்கோரை பாசிகள் வர அதிக வாய்ப்புகள் இல்லை.
அதனால் இங்கு இப்படி கடல்நீர் பச்சை நிறமாக மாறியதற்கு ரசாயனக் கழிவுகள் காரணமா என தெரியவில்லை. எனவே இதுகுறித்து மீன்வளத்துறையினர் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.