காஷ்மீரா? ஊட்டியா ? உதகையில் தொடரும் உறை பனிப்பொழிவு!
உதகையில் தொடரும் உறை பனிப்பொழிவு காரணமாகக் குறைந்தபட்சமாக 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் உதகையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை நகர், தலைகுந்தா , HPF, காந்தல், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி கடுமையாக நிலவுகிறது.
அங்குள்ள புல்வெளிகளிலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது படிந்துள்ளது. ஊட்டிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் குளிரில் அறைக்குள் முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் இரவில் கடும் குளிர் நிலவுவதால் அதிகாலையில் பனி படர்ந்து வெண்மை நிறமாக காஷ்மீர் போல் காட்சி அளிக்கிறது.

இதனால் உதகையில் அனைத்து பகுதிகளிலும் கடுங்குளிர் நிலவுகிறது. உறைபனி பொழிவு காரணமாக உதகை அரசு தாவரவியல் பூங்கா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் புல்வெளிகள் மீது உறைபனி பொழிவு அரை அங்குலத்திற்கு மேல் வெள்ளை கம்பளம் விரித்தது போல் காணப்பட்டது.
வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனிக் காலமாக இருக்கும். இந்த ஆண்டு முன் கூட்டியே நவம்பர் மாதத்திலேயே உறை பனி காலம் தொடங்கியது. டிசம்பர் தொடக்கத்தில் மழை பெய்ததால் உறை பனி குறைந்து, அடர் பனி மூட்டம் மட்டும் நிலவியது.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் காணப்படும். குறிப்பாக நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி ஆரம்பித்து படிபடியாக உறைபனி பொழிவு காணப்படும், ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை காரணத்தால் பனிபொழிவு தாமதமாக ஜனவரி மாதத்தில் துவங்கியுள்ளது.
இதனால் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங் குளிரும் நிலவுகிறது. இந்த நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி பொழிவு காணப்பட்டது. தற்போது குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்துள்ளது.