கதிரவன் ஐ.ஏ.எஸ். உடல்நலக் குறைவால் காலமானார்

கதிரவன் ஐ.ஏ.எஸ். உடல்நலக் குறைவால் காலமானார்

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் கதிரவன் ஐ.ஏ.எஸ். உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி கதிரவன்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கெட்டிக்காரர். விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். அதனால் வேளாண்மை படிப்பில் சேர்ந்து அதில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு துணை ஆட்சியராக  தர்மபுரி மாவட்டத்தில் பணியில் அமர்ந்தார்.

பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் ஆகிய ஊர்களில்  வருவாய் கோட்டாட்சியராகவும்  (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார். மாவட்ட வருவாய் அதிகாரியாக 2007-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியவர். சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணிபுரிந்தவர் கதிரவன் 

2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்றார். வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றினார்.

பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆட்சியராக பதவியேற்ற இவர்,  பின்னர் ஈரோடு மாவட்டத்தின் 33-வது கலெக்டராக கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார்.

இதனையடுத்து  ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தபோது,  கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டார். கொரோனா பணியின் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.

சேலம் டேன்மேக் மேலாண் இயக்குநராக பதவி வகித்து வந்த கதிரவனுக்கு , அண்மையில் தான்  நெடுஞ்சாலைத்துறையில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனராக  அவர் பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கதிரவன் ஐ.ஏ.எஸ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.  இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com