‘பழனி முருகன் கோயிலுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்’:வானதி சீனிவாசன் காட்டம்!

‘பழனி முருகன் கோயிலுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்’:வானதி சீனிவாசன் காட்டம்!

ழனி முருகன் கோயிலுக்கு கடந்த 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆனால், ஆளுங்கட்சியினரால் இதில் பல அத்துமீறல்களும் அதிகார துஷ்பிரயோகமும் நடைபெற்றுள்ளதாகக் கூறி, மீண்டும் அந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகத்தை முறையாக நடத்த வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

‘‘பழனி அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் தமிழர்களின் உணர்வோடு கலந்தது. இக்கோயில் முருகன் நவபாஷாணத்தால் ஆனவர். இவர் சித்தர் போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். முருகனின் மூன்றாம் படை வீடான இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோயிலுக்கு கடந்த மாதம் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயிலின் சீரமைப்புப் பணிகள், கட்டுமானப் பணிகள் முடிவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஆகம விதிகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், அதிகாரிகளும் என்ன நினைத்தார்களோ, என்ன சொன்னார்களோ அதன்படியே நடந்துள்ளதாக பழனி மக்களும், பக்தர்களும் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

எந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றாலும் 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடக்க வேண்டும் என்பது ஆகம விதி. தடையின்றி மண்டலாபிஷேகம் நடைபெற வேண்டுமானால், இடையில் பெரிய திருவிழாக்கள் எதுவும் வராமல் இருக்க வேண்டும். அதற்கேற்ப கும்பாபிஷேக தேதியை நிச்சயத்திருக்க வேண்டும். ஆனால், கும்பாபிஷேகம் நடைபெற்ற ஒரு வாரத்துக்குள் பல லட்சம் பக்தர்கள் வருகை தரும் தைப்பூசம் திருவிழா வருகிறது. இது பழனியின் பெரும் திருவிழா என்பதாலும், அதற்கான ஏற்பாடுகளுக்கு குறைந்தது ஒரு வாரமாவது தேவைப்படும் என்பதாலும், மண்டலாபிஷேக பூஜையை முறைப்படி நடத்துவது சாத்தியமற்றது. அதனால் இவை அனைத்தும் யாருடைய உத்தரவின் பேரில் நடத்தப்பட்டது என்பதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் மக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, கும்பாபிஷேகத்துக்கு முதல் நாள், அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது துறை அதிகாரிகளும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் இக்கோயில் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளது அதிர்ச்சியையும், மன வேதனையையும் அளிக்கிறது. இது அப்பட்டமான ஆகம மீறல். அது மட்டுமின்றி, இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் செயல். எனவே, இதற்காக, அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இனி இதுபோன்ற ஆகம மீறல்கள் நடக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த ஆகம மீறலால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ள தலைமை அர்ச்சகர், ‘இதற்காக பிராயசித்த கும்பாபிஷேகம் ஒன்றை நடத்த வேண்டும்’ என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது வேண்டுகோளின்படி பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை சட்டங்களின்படி, மதச்சார்பற்ற தமிழக அரசோ, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளோ திருக்கோயிலின் வழிபாடு, ஆகமம், கும்பாபிஷேகம் போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாது. அதனை, சம்பந்தப்பட்ட திருக்கோயில் அறங்காவலர்கள் குழுவும், அர்ச்சகர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். அதோடு, பாரம்பரியமாக சித்தர் வழிவந்த குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மரியாதைகள் வழங்கப்பட வேண்டும்.

அறங்காவலர்கள் குழுவில் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களே இருக்க வேண்டும். ‘பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் ஓர் இயற்கை அதிசயம் என்றும், அங்கு ஆகம விதிகளைப் பின்பற்றி, மண்டலாபிஷேகம் நடக்க வேண்டும்’ என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இனியும் இந்துக்களின் உணர்வுகளை மதித்து, ஆகம விதிகளைப் பின்பற்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு மீண்டும் பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com