குறவன் குறத்தி ஆட்டம் : ஆபாசமாக இருந்தால் ஆக் ஷன் ரெடி!

குறவன் குறத்தி ஆட்டம் : ஆபாசமாக இருந்தால் ஆக் ஷன் ரெடி!

குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 'ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் குறவன் சமூக மக்களை பாதிக்கும் விதமாகவோ, இழிவுப்படுத்தும் வகையிலோ இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தமிழகத்தில் குறவன்-குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் நடப்பதாகவும், இது குறவர் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஆபாச நடனத்திற்கு தடை விதிக்கவேண்டும். இணைய தளத்தில் குறவன்-குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாசமான வீடியோக்களை நீக்கவேண்டும் என்று முறையிடப்பட்டது.

குறவன் குறத்தி நடனம் என்பது தமிழ்நாட்டின் முக்கியமான கலை வடிவம். குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெணும் ஆடும் ஆட்டம். சமீபகாலத்தில் ஆபாச நடனமாக உருவெடுத்திருக்கிறது. இணையத்தில் குறவன் குறத்தி நடனம் என்னும் பெயரில் ஏராளமான ஆபாச நடனங்கள் அதிகரித்து வருகின்றன.

நிஜமான குறவன் குறத்தி ஆட்டம் என்பது வெகுவாக குறைந்துவிட்டது. உடும்புத் தோலால் ஆன இஞ்சிராவையோ அல்லது தகர டப்பாவையோ பயன்படுத்தி ஆடும் ஆட்டம், ஏராளமான தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கிறது. மாறு வேடங்களில் வரும் சினிமா கதாநாயகர்களுக்கு குறவன் வேடம்தான் பொருத்தமானதாக இருந்திருக்கிறது.

இந்நிலையில் ‘ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தும் விதமாக ஆடலும் பாடலும் கொண்ட வீடியோ பதிவுகள் இருந்தால் சைபர் கிரைம் காவல்துறையினர் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஒரு காலத்தில் கருதப்பட்ட குறவன் குறத்தி நடனம், இன்று ஆபாசமாக மாறியிருக்கிறது. இது எல்லை மீறிவிடக்கூடாது என்பதை கண்காணிப்பதோடு, ஏற்கனவே இணையத்தில் உலா வரும் ஆபாச வீடியோக்களையும் தடை செய்தாகவேண்டும். தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com