வேங்கை வயல் விவகாரம் போல் அம்பாசமுத்திரம் விவகாரமும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்!

வேங்கை வயல் விவகாரம் போல் அம்பாசமுத்திரம் விவகாரமும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்!

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி போன்ற பகுதிகளில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.

பல்வீர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் முதன்மைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அமுதா தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் படி வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் உலக ராணி நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து விசாரணை கோப்புகளும் சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் குழு, தங்களுடைய விசாரணையை உடனே தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் சட்டம் ஓழுங்கு காவல்துறையினரின் வழக்கு விசாரணை ஆரம்பித்து, பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்டவர்களின் கடுமையான கண்டனத்திற்கும் போராட்டத்திற்கும் பின்னரே தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 147 பேரிடம் விசாரணை செய்யப்பட்டு, சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4 மாதங்கள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள பின்னடைவாகவே கருதப்படுகிறது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணையில், 11 பேர் சந்தேக வளையத்தில் இருப்பதாகவும் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்றும் அனுமதி கேட்டது. அதையெடுத்து 11 பேரிடமும் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக்குழுவும் அமைத்திருக்கிறது.

சி.பி.சி.ஐ.டி விசாரணை, வேங்கை வயல் விவகாரத்தில் நான்கு மாதங்களாகவே தொடர்நது வருகிறது. அம்பாசமுத்திரம் விஷயத்தில் ஒரு மாதகால தாமதத்திற்கு பின்னர் ஒரு வழியாக ஆரம்பமாகியுள்ளது. இது இன்னும் சில மாதங்கள் தொடருமா என்கிற கேள்வி எழுகிறது.

வேங்கை வயல், அம்பாசமுத்திரம் இரண்டுமே மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்ட சமூக பிரச்னை. இவற்றையெல்லாம் சாதாரண சம்பவமாக எடுத்துக் கொள்ள முடியாது. குற்றவாளிகளை விரைவாக அடையாளம் காட்டுவதன் மூலமாக, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். சி.பி.சி.ஐ.டி விசாரணை மாதக்கணக்கில் தொடர்ந்தால் சி.பி.ஐ விசாரணையை தவிர்க்க முடியாது என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com