ஆண்டவன் உத்தரவு பெட்டி

ஆண்டவன் உத்தரவு பெட்டி

ன்மீகத்தில் பலவித நம்பிக்கைகளின் பெயரில் சில ஆச்சர்யங்கள் எல்லாக்காலத்திலும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. சிலவற்றை பகுத்தறிவு கொண்டு கேள்விகளுடன் அணுகினாலும் விடை தெரியாமல் போவதுதான் ஆன்மீகத்தின் சிறப்பு. அப்படி ஒரு ஆச்சர்யமான விஷயம்தான் இங்கு நாம் காணப்போகும் ஆண்டவன் உத்தரவு பெட்டி குறித்த செய்தி.


    திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

    நாட்டில் வேறு எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பாக இங்கு உள்ள ’ஆண்டவன் உத்தரவு பெட்டி’ விளங்குகிறது. முருகனை மனதார நம்பி வழிபடும்  பக்தர்களின் கனவில் அந்த சுப்ரமணிய சுவாமியே தோன்றி குறிப்பிட்ட ஒரு பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள உத்தரவுப் பெட்டியில் வைக்குமாறு உத்தரவிடுவார். அதன்படி  உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால், பூ போட்டுப் பார்த்து சுவாமியின் அனுமதியுடன்  கனவில் வந்த பொருளானது அவரிடமிருந்து பெறப்பட்டு உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படுகிறது.

      அடுத்த பொருள் பற்றி வேறு ஒரு  பக்தரின் கனவில் வரும் முருகப்பெருமானின் உத்தரவு கிடைக்கும் வரை அந்த பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

     இதில் சிறப்பு என்னவெனில் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்த பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. அது நேர்மறையாகவும் இருக்கலாம் அல்லது  எதிர்மறையாகவும் இருக்கலாம். உதாரணமாக கடந்த காலங்களில் கனவில் வந்து சொன்ன சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்ட போது, அந்த ஊரில், நவீன வாகனங்களின் பெருக்கத்தால் சைக்கிளின் பயன்பாடு குறைந்து போனது என்றும், துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா பாகிஸ்தானை வென்றது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

     இந்நிலையில் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வநாத சிவாச்சாரியார் என்ற பக்தரின் கனவில் உத்தரவான வேல் நேற்று முதல் இப்பெட்டியில் பூஜைக்குரிய பொருளாக வைக்கப்பட்டு  பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவையொட்டி, கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி முதல் உத்தரவு பெட்டியில் நெற்கதிர் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

      ஆண்டவன் சந்நிதியில் உள்ள இந்த உத்தரவுப் பெட்டியும், எதிர்காலத்தை சூட்சுமமாக உணர்த்தும் பொருள்களை கனவில் சொல்வது போல் வைத்து வழிபடும் வழக்கமும், உண்மையில் ஆச்சர்யத்துடன் ஆன்மீக அதிசயமாகவும் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com