மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! சீறி பாய காத்திருக்கும் காளைகள் ...!

அதிக காளைகளை அடக்குபவருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசு!
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! சீறி பாய  காத்திருக்கும் காளைகள் ...!

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு புகழ் பெற்றது அலங்காநல்லூர். காணும் பொங்கல் நாளில் ஆண்டுதோறும் இங்கு ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெறும். தமிழகத்தில் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் மதுரையில் அவனியாபுரம், பாலமேடு,அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள்தான் பிரபலமானது.

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்க உள்ளது. மதுரை அலங்காநல்லூரில் இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொங்கல் விழா என்றாலே ஜல்லி கட்டு தான் அனைவரது நினைவிலும் வரும். அதேபோல் ஜல்லிக்கட்டு என்றாலே அனைவரது நினைவிலும் வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தானே. இந்த ஜல்லிக்கட்டு விழாவினை காண ஆயிரக்கணக்கானோர் அலங்காநல்லூரில் குவிந்து கிடப்பர்.

இத்தகைய புகழ்வாய்ந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்குகின்றது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியைசைத்து தொடங்கி வைக்க உள்ளார் .

இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 1000 காளைகளும், 300 வீரர்களும் களம் காண உள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், ஆவணங்கள் சரிபார்க்கபட்டு, உடற்தகுதியுள்ள காளைகளும், வீரர்களும் போட்டியில் களமிறக்கப்படவுள்ளனர்.

வாடிவாசல், பார்வையாளர்கள் மேடை, பரிசுபொருள் மாடம், விஐபி கேலரி மற்றும் இரண்டடுக்கு பாதுகாப்பு வேலிகள், காளைகளுக்கு வைக்கோல் உணவு, தண்ணீர் தொட்டிகள் என அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

வெற்றி பெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக ஒரு காரும், சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளன.

இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கும், காளை உரிமையாளருக்கும் தலா ஒரு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இன்றைய ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2 எஸ்.பிக்கள், 8 ஏ.டி.எஸ்.பிக்கள், 29 டி.எஸ்.பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com