மதுரை காமராஜர் பல்கலைக்கழக உளவியல் மாணவர்கள் துறைத்தலைவர் மீது பாலியல் சீண்டல் புகார்!
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் இளநிலை மற்றும் முதுகலை உளவியல் மாணவர்கள், துறைத் தலைவர் சி கருப்பையா மீது பாலியல் சீண்டல் புகார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகாரை மாணவிகள் மட்டுமல்ல மாணவிகளும் இணைந்தே பதிவு செய்துள்ளனர். சம்மந்தப்பட்ட உளவியல் துறைத்தலைவர் கருப்பையா வாய்மொழியாகவும், பிஸிக்கலாகவும் பாலியல் ரீதியாகத் தங்களைத் துன்புறுத்தியதாக முறைப்படி கூட்டாக அவர்கள் புகார் அளித்தனர். இதற்கான கடிதம் சமீபத்தில் MKU துணைவேந்தர் ஜே குமார் மற்றும் பதிவாளர் M சதாசிவம் ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மாணவ, மாணவிகள் சமர்பித்த புகார் நகலின் படி, கருப்பையா, மாணவிகளிடம் பாலியல் கண்ணோட்டத்துடன் கருத்துக்களைக் கூறுவதாக மாணவர்கள் கூறியுள்ளனர். உதாரணமாகச் சொல்வதென்றால், சில மெலிந்த பெண் மாணவிகளைச் சுட்டிக்காட்டி, "இப்போதெல்லாம், ஆண்களுக்கு ஒல்லியான பெண்களே பிடிக்கும். உங்கள் புகைப்படங்களை மேட்ரிமோனியல் பத்தியில் போட்டால், உங்களுக்கு உடனே ஆட்கள் கிடைப்பார்கள்" என்று கூறுவார், இது போன்ற கமெண்டுகள் எங்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கின. என மாணவிகள் குற்றம் சாட்டினார். அத்துடன் ஆசிரியர் இவ்வாறு கூறியதற்கான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களும் தங்களிடம் உள்ளதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
மாணவர்களின் வகுப்பறைகளுக்கு மின் விளக்குகள், கொசு ஒழிப்பு கருவிகள் போன்ற வசதிகளைக் கேட்டபோது கருப்பையா மிரட்டியதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நாங்கள் தலைமை நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்தபோது, அவர் பதிலளிக்கவில்லை. மாணவர்கள் வசதிக்காக சக மாணவர்களிடம் இருந்து தொகையை வசூல் செய்தனர். அனைத்து பாடப்பிரிவுகளையும் கையாள போதிய ஆசிரியர்கள் இல்லை. நாங்கள் பிரச்னையை எழுப்பியபோது கருப்பையா எங்களை மிரட்டினார். மேலும் மாணவர்களை வேறு ஏதேனும் கல்வி நிறுவனத்தில் சேருமாறு கேட்டுக் கொண்டார். சுகாதாரமற்ற கழிவறைகள் காரணமாக இரண்டு மாணவிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர், அதோடு சுகாதாரப் பணிகளுக்கு பணத்தையும் வசூல் செய்து கொடுத்து விட்டு வகுப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்ய வேண்டியிருந்தது" என்று மாணவர்களின் புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பெயர் வெளியிட விரும்பாத மாணவர்களில் சிலர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் கருப்பையாவின் போக்குகள் ஆரம்பத்தில் தங்களால் கண்டறிய இயலாவண்ணம் இருந்ததாகவும், ஒருமுறை இண்டெர்னல்
மார்க்ஸ் தாமதத்தைச் சுட்டிக்காட்டி மாணவி ஒருவர் கேள்வி எழுப்பும் போது தான் அதற்கு அவர் அளித்த நாகரீகமற்ற பதில் மற்றும் எதிர்நடவடிக்கைகள் மூலமாகவே அவரது சுயரூபம் மாணவ, மாணவிகள் மத்தியில் வெளிவந்தது என்று கூறினார். மாணவிகளிடம் விஷமத்தனமாக அவர்களது உள்ளாடை அளவுகளைக் கேட்பது, மாணவர்களிடம் ‘விறைப்புத் தன்மை” என்றால் என்ன என்று இணையத்தில் தேடச் சொல்வது போன்ற அநாகரீகமான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்ட போது பொறுக்க முடியாமல் நாங்கள் இப்படிப் புகார் அளிக்கத் தூண்டப்பட்டதாகத் தெரிவித்தனர்.
சம்மந்தப்பட்ட பேராசிரியர் கருப்பையாவைத் தொடர்பு கொண்டு அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார். அத்துடன், மாணவர்கள் கோரிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாகக் கூறி தொடர்பைத் துண்டித்தார்.
புகார் குறித்து MKU பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரைத் தொடர்பு கொண்ட போது, உள்மட்ட புகார் குழு மூலமாக இந்தப் புகார் மீதான விசாரணை வரும் வாரத்தில் தொடங்கும், குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.