மக்னா யானை: மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

மக்னா யானை: மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மீண்டும் டாப்சிலிப் வனப்பகுதிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தர்மபுரியில் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த மக்னா யானையை வனத்துறையினர் கடந்த 5-ந் தேதி கும்கி யானை உதவியுடன் பிடித்து பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் விட்டனர். ஆனால் இந்த யானை வனத்திற்குள் செல்லாமல் மீண்டும் அருகில் உள்ள கிராமங்களுக்குள் சென்று அட்டகாசம் செய்தது. பொள்ளாச்சி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கடந்த 4 நாட்களாக கிராமங்களுக்குள் நுழைந்து சுற்றி திரிந்து வருந்தது. நேற்று கோவை நகருக்குள் புகுந்தது. குனியமுத்தூர், புட்டுவிக்கி வழியாக செல்வபுரம், தெலுங்குபாளையம், பேரூர் பகுதிகளில் சுற்றி திரிந்து, அட்டகாசம் செய்தது.

இதையடுத்து யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர், உதவிக்காக பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து ‘சின்னதம்பி’ என்ற கும்கி யானையையும் அழைத்து வந்தனர்.

நேற்று மாலை பேரூர் பகுதியில் சுற்றி திரிந்துக் கொண்டிருந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

பின்னர் மக்னா யானையை, கும்கி யானை உதவியுடன் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பில்லூர் அணை அருகில் அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் மருத்துவ குழுவினருடன் வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளியங்காடு, தாயனூர் பகுதி மக்கள் யானையை இங்கு கொண்டு வந்து விட்டால் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும். யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும். எனவே, வேறு எங்காவது விட வேண்டும் எனக்கூறி யானையை ஏற்றி வந்த லாரியை மறித்து போராட்டம் நடத்தினர்.

மேலும் சாலையின் நடுவே கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் விறகுகள் வைத்து தீமூட்டி விடிய, விடிய போராட்டம் நடத்தினர். இதையடுத்து இன்று அதிகாலை 5 மணி அளவில் வெள்ளியங்காட்டில் இருந்து மேட்டுப்பாளையம் வனச்சரக மரக்கிடங்கு பகுதியில் லாரியை நிறுத்தி வைத்தனர். யானை மயக்க நிலையிலேயே இருக்க வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர்.

பிடிபட்ட இந்த மக்னா யானையை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் கோவை காரமடை வனப் பகுதியில் விடுவதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் யானை 16 மணி நேரத்திற்கும் மேலாக லாரியிலேயே நின்று கொண்டிருந்தது. இதன் காரணமாக யானை சோர்வுடன் காணப்பட்டது. இதையடுத்து யானையை, காலை, 9:15 மணிக்கு, வால்பாறை டாப்சிலிப் அருகே உள்ள, மானாம்பள்ளி வனப்பகுதிக்கு கொண்டு செல்வதாக கூறி சென்றனர். உதவி வனப் பாதுகாவலர்கள் தினேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் வன அதிகாரிகள், வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில், 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடன் சென்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com