பணமோசடி வழக்கு; அமைச்சர் செந்தில் பாலாஜி தப்புவாரா?

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளில் மீதான தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்க உள்ளது.

தமிழக மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, மற்றும் அவர் நண்பர்கள் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். அவை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் இந்த வழக்கில் ஆஜாரானார். அப்போது அவர் "அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு அரசின் அதிகாரமிக்க நபராக உள்ளார்.

ஏற்கனவே அவர் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, அவர் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது" என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று (அக்டோபர் 31) வழங்குவதாக உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார். அந்த வகையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com