‘நிதிச்சுமை ஒருபுறம் இருந்தாலும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்’ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

‘நிதிச்சுமை ஒருபுறம் இருந்தாலும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்’ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று நடைபெற்ற போக்குவரத்துக் கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘மகளிருக்கு கட்டணமில்லா பயணத் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் 288 கோடி பயணங்களைப் பெண்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள். இந்தத் திட்டம் அமலுக்கு வரும் முன்பு அரசுப் பேருந்தில் பயணித்த பெண்களின் எண்ணிக்கை 40 சதவிகிதமாக இருந்தது. அது இப்போது70 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது.

அரசுக்கு நிதிச் சுமை கூடுதலாக இருந்தாலும், மக்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்து இருந்தது. தற்போது போக்குவரத்துத் துறையை சீர் செய்ய பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வியைப் போலவே போக்குவரத்துத்துறையும் மக்களின் நேரடித் தொடர்பில் உள்ளது’ என்று அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதியை தொடர்ந்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “போக்குவரத்துக் கழகங்களை நாட்டுடமை ஆக்கியவர் கருணாநிதி. தமிழகத்தில் 21 ஆயிரம் பேருத்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட கருணாநிதி வழியில் வந்த ஆட்சியில் போக்குவரத்துக் கழகம் ஒருபோதும் தனியார் மயம் ஆகாது. தற்போது புதிய பணியாளர் நியமனம் மற்றும் புதிய பேருந்துகளை வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார். இதனால் எப்படி போக்குவரத்துத் துறை தனியார் மயம் ஆகும்? ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால் அவருக்கு மருத்துவம் பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்துதான் ஆக வேண்டும். அது அந்த நபருக்கு பாதகமாக அமையும் என்ற எண்ணத்தையும், கருத்தையும் சில தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் மனதில் விதைக்க வேண்டாம். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை முறையாக நிறைவேற்றவில்லை. தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த பிரச்னைகள் இப்போது ஏற்படாதவாறு தேவையான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன” என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 612 தொழிலாளர்களுக்கு 171 கோடியே 23 லட்ச ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com