மயானத்தைக் காணவில்லை - வடிவேல் பாணியில் மனு!

மயானத்தைக் காணவில்லை - வடிவேல் பாணியில் மனு!

வ்வொரு ஊராட்சியிலும் மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து அதற்கான தீர்வை விரைவில் வழங்கும் விதமாக அரசின் கிராமசபைக் கூட்டம் நடந்து வருகிறது. கிராம மக்கள் தங்களின் குறைகளை மனுவாக அந்தக் கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவரிடம் தந்து அதன் மீதான நடவடிக்கை எடுக்க கோருவார்கள். இந்த கிராமசபை கூட்டங்களில் அரசைக் கவரும் வகையில் வித்தியாசமான முறையில் தங்கள் மனுக்களை சம்பந்தப்பட்டவர்களோ அல்லது கட்சி சார்ந்தவர்களோ அளிப்பதும் வழக்கம்.

     அதில் ஒன்றுதான் இந்த செய்தியில். சேலம் ஊராட்சி ஒன்றியம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் நேற்று கிராமசபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

      அப்போது அங்கு வந்த பாரதீய ஜனதாக் கட்சியை சேர்ந்தவர்கள் சேலம் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் எம் ஐ பி முருகன் தலைமையில் ஊராட்சியில் உள்ள மயானத்தை காணவில்லை என்றும் அவற்றை கண்டுபிடித்துத் தரக்கோரியும், பாடை கட்டி தாரை தப்பட்டை அடித்தவாறு வித்யாசமான முறையில் மனு கொடுக்க ஊர்வலமாக வந்தனர்.  
      அப்போது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஊர்வலமாக வந்த பாரதிய ஜனதாவினரை தடுத்து முறையாக  கிராமசபைக் கூட்டத்தில் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதை அடுத்து கிராம சபைக் கூட்டத்தில் இருந்த அதிகாரிகளிடம் பாரதிய ஜனதாவினர் “சுடுகாட்டில் குப்பை கழிவுகளை கொட்டுவதால் அங்கு இறந்தவர் களின் உடலை புதைக்கவும் எரியூட்டவும் இடமில்லை. இதனால் மயானம் எங்கு இருக்கிறது என்று தெரிய வில்லை எனவே மயானத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும். மேலும்  ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் அமைத்தும், தண்ணீர் வருவது  இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே கடந்த கிராம சபைக் கூட்டத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை” என்ற குற்றச்சாட்டும் வைத்தனர்.

       அப்போது அந்த அதிகாரிகளுக்கும் மனு கொடுக்க வந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கிராமசபைக் கூட்டத்தில் இருந்தவர்கள் பாரதிய ஜனதா நிர்வாகிகளை சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து  ஊராட்சி மன்றத் தலைவரிடம் அவர்கள் மனு அளித்துச் சென்றனர்.

     மக்களின் குறைகளை கூட்டத்தின் மூலம் அறிந்து உரிய நடவடிக்கை மூலம்  அதை நிவர்த்தி செய்யவே அரசின் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை எனும் போதுதான்  இம்மாதிரி நூதனப் போராட்டங்களில் ஈடுபடும் நிகழ்வுகளே ஏற்படுகிறது. அரசு அதிகாரிகள் கவனிப்பார்களா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com