தூங்காமல் விழித்திருந்த நிலாப் பெண் - விசித்திர வழிபாடு.

தூங்காமல் விழித்திருந்த நிலாப் பெண் - விசித்திர வழிபாடு.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோட்டூர் எனும் கிராமம் உள்ளது. இங்குள்ள மக்கள்  ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் என்று பௌர்ணமி நாளில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பத்து வயதுக்குட்பட்ட சிறுமியைத் தேர்ந்தெடுத்து அவரை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தி வருகிறார்கள். இந்த வழிபாடு கிராம மக்களால் பாரம் பரியமாக நூறாண்டுகளுக்கும் மேல் காலங்கள் மாறினாலும் தடைபடாமல் தொடர்ந்து  நடத்தப்பட்டு வருவது சிறப்பு.  

        அதன்படி இந்த ஆண்டு நிலா பெண்ணை தேர்வு செய்யும் சடங்குகள் கடந்த 30ஆம் தேதி தொடங்கப்பட்டு அதன் முன்னோட்டமாக  ஊரில் உள்ள 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் ஒன்று சேர்ந்து கிராமத்தில் உள்ள மாசடச்சி அம்மன் கோவிலுக்கு பால் கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏழு நாட்கள் தங்கள் வீடுகளில் இருந்து 15 சிறுமிகள் பல வகை உணவுகளை  தயார் செய்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். ஒவ்வொரு நாள் இரவும் அவர்கள் கொண்டு வரும் உணவுகளை  ஒன்றாக சேர்த்து அதன் ஒரு பகுதியை கோவிலில் படைத்து விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். அந்த வழிபாட்டின் தொடர்ச்சியாக  நேற்று முன்தினம் இரவு எட்டு மணியிலிருந்து கோவிலில் தூங்காமல் விழித்திருக்கும் சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

        அதில் நீண்ட நேரம் தூங்காமல் இருந்த, அந்த கிராமத்தைச் சேர்ந்த, கார்த்திகேயன் மேகலா தம்பதியின் மகளான, திண்டுக்கல்லில் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சர்வஅதிர்ஷ்டா என்ற சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்ட சிறுமி சர்வஅதிஷ்டாவை கிராமத்துப் பெண்கள் ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமையை அமர வைத்து பறித்துவந்த ஆவாரம் பூக்களை மாலையாக தொடுத்து நிலா பெண்ணான சிறுமிக்கு அணிவித்ததுடன் அந்தப் பூக்களாலாலேயே அவருடைய தலை கைகளை சுற்றி அழகாக ஆபரணங்கள் போல் அலங்கரித்தனர்.

        அலங்கரித்த சிறுமியின் தலையில் ஒரு கூடையுடன் இருந்த  ஆவாரம் பூக்களை வைத்து  கிராமத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு ஏற்கனவே கூடியிருந்த வர்களால் தாரை, தப்பட்டை முழங்க நிலா பெண்ணுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று நிலா பெண்ணான சிறுமியுடன் அவருடைய தோழிகளையும் அமர வைத்தனர். பின் அவர்களைச் சுற்றி வந்து கும்மியடித்து ஆண்கள், பெண்கள் என பாட்டுப் பாடி கோலாகலமாக ஆடினார்கள்.

பின்னர் மாசடச்சி அம்மன் கோவிலுக்கு சிறுமியை அழைத்து வந்து அந்தச் சிறுமியின் தாய்மாமன்களால் பின்னப்பட்ட பச்சை  ஓலைக் குடிசைக்குள் அமர வைத்தனர். அதைத் தொடர்ந்து  பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து குடிசையில் இருந்த சிறுமியை வெளியே அழைத்து வந்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆவாரம் பூ வைத்திருந்த கூடையை சிறுமி தலையில் வைத்து சுமந்தபடி ஊர் எல்லையில் உள்ள கோவில் கிணற்றுக்கு அழைத்துச் சென்றனர். கிணற்றின் படிக்கட்டு வழியாக சிறுமியுடன் பெண்களும் உள்ளே இறங்கினர் பின்பு கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களை எடுத்து அதன் மீது மண் கலயத்தில் விளக்கு ஒன்றை வைத்தனர். நிலா பெண்ணான அந்த சிறுமி கையால் அந்த விளக்கை ஏற்றி வழிபாடு செய்தனர்.

        கிணற்றில் ஏற்றிய அந்த  விளக்கு ஏழு நாட்கள் அணையாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்கள் நடத்தி வரும் இந்த வினோத வழிபாடு ஊர் நன்மைக்காகவும் மழைவளம் பெருகி விவசாயம் செழிக்கவும் பசி பட்டினியின்றி மக்கள் மகிழ்வுடன் வாழவும் செய்யப்பட்டாலும், இந்தக் காலத்திலும் இது போன்ற விசித்திர நம்பிக்கைகளும் வழிபாடுகளும் இன்னும் இருந்து வருவது ஆச்சரியமாகவே இருக்கிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com