தமிழகம் முழுதும் 10 க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது!

தமிழகம் முழுதும் 10 க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது!

தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்ட சோதனையில் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவப் படிப்பைப் படிக்காமல் பலர் மருத்துவம் பார்ப்பதாக வந்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின் படி பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கே.ஜி கண்டிகை, வீரகோயில் செங்கட்டானூர், பள்ளிப்பட்டு, பெருமாநல்லூர் ஆகிய கிராமங்களில் மருத்துவம் படிக்காமலே மருத்துவம் பார்த்து வந்த 5 போலி மருத்துவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கிராமங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்ட போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்த பழனிவேல் மற்றும் செந்தில் குமார் எனும் இரண்டு பேர் பிடிபட்டனர். பிறகு அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நாகை மாவட்டத்தில் ஆட்சியர் அருள்தம்பி ராஜ் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது நாகூர் தர்கா அருகே உள்ள மெடிக்கலில் மருத்துவம் படிக்காமலே அங்குள்ள மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தின்னப்பட்டி ரயில்நிலையம் அருகே மெடிக்கல் ஷாப் வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்த ஆண்ட்ரஸ் என்ற போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆங்கில மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் உத்தரவின் பேரில் நடைபெற்ற சோதனையில் கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டைச் சேர்ந்த குணசேகர், புதுநகரைச் சேர்ந்த மதியழகன், கொய்யாத்தோப்பு தெருவைச் சேர்ந்த காந்தரூபன், கருப்பூரைச் சேர்ந்த சத்யா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே போன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேலச்சேரி கிராமத்தில் மெடிக்கல் வைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த மனோகர் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இதே புகாரில் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த வி என் பாளையம் பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம், மற்றும் தெலுங்கர் தெரு பகுதியைச் சேர்ந்த தேவராஜன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com