நயன்தாரா குழந்தை விவகாரம்; விதிமீறல் இல்லை என அறிக்கை!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்த விவகாரத்தில் விதிமீறல் எதுவும் இல்லையென தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9-ம் தேதி விமரிசையாக திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் அக்டோபர் 9-ம் தேதி, இரட்டை குழந்தைகளுக்கு தாங்கள் பெற்றோர் ஆன விஷயத்தை விக்னேஷ் சிவன் புகைப்படத்துடன் பதிவிட, அச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  வாடகைத்தாய் முறை மூலம் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றிருந்தால் அதற்கான விதிகளை அவர்கள் முறையாக கடைப்பிடித்தார்களா என்று கேள்வி எழுப்பப் பட்டது.

 இது குறித்து விசாரிக்க குழு அமைத்து விசாரிக்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி தமிழ்நாடு சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்ப்பட்டு இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கப் பட்டது.

 அந்த அறிக்கையை அமைச்சர் மா. சுப்பிரமணியம் நேற்று வெளியிட்டார். அவர் பேசும்போது, ‘’நயன்தாரா – விக்னேஷ் சிவனந்தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரத்தில் விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை.. அவர்களுக்கு 2016-ம் வருடம் மார்ச் 11-ம் தேதி பதிவுத் திருமணம் நடந்ததற்கான சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர் ’’ என தெரிவித்தார்.

 நயன்தாரா, விக்னேஷ் சிவனின் பெயரைக் குறிப்பிடாமல் வெளிவந்துள்ள அந்த அறிக்கையில் இடம்பெற்ற பிற தகவல்கள்;

 சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாக இந்த  தம்பதி குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிய வந்தது.

மருத்துவமனை, சிகிச்சை அளித்த மருத்துவர், வாடகைத்தாய்க்கு பேறு கால சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டது.

இத்தம்பதிக்கு பதிவுத் திருமணம் 11.3.2016-ல் நடைபெற்றதாக பதிவுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவுத்துறையால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

 மேலும் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த தம்பதியிடம்  சினை முட்டை மற்றும் விந்தணு பெறப்பட்டு கரு முட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டது.

பின்னர் 2022-ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த கரு முட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கப் பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

 விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பேறுகாலத்தில் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அக்குழந்தைகள் 2022, அக்டோபர் 9ஆம் தேதி தம்பதியிடம் வழங்கப்பட்டுள்ளனர்.

 -இவ்வாறு அந்த விசாரணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 மேலும் அந்த தனியார் மருத்துவமனையில் இந்த வாடகைத் தாய் விவகாரம் தொடர்பான ஆவணங்கள் முறையாக பராமரிக்கப் படாததால், அந்த மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com