பரந்தூரின் புதிய விமான நிலையம் - மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்!
பரந்தூரில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கான சைட் கிளியரன்ஸ் அனுமதி மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறது. தமிழக அரசின் சார்பில் அனுப்பப்பட்ட விண்ணப்பத்தை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.கவின் ராஜ்யசபா எம்.பியான பி. வில்சன் அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.கே சிங், பரந்தூரின் திட்டம் தொடர்பாக மத்திய அரசு செய்யப்போகும் பணிகள் குறித்து விவரித்திருக்கிறார்.
புதிய விமான கட்டுமானப் பணிக்காக மத்திய சிவில் விமான போக்குவரத்துறை 2,467 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், விரைவில் சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகள் ஆரம்பிக்க இருப்பதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இது தவிர தஞ்சாவூர் விமான நிலையத்திற்கு உட்பட்ட நிலங்கள் கைமாறி இருப்பதாகவும், வேலூரில் உள்நாட்டு விமானங்கள் ஆர்சி வர விமானங்கள், ஏர்கிராப்ட் போன்றவை வந்து செல்வதற்காக லைசென்ஸ் வழங்கப்படும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆக மொத்தம், பரந்தூரில் புதிய விமான நிலையம் கொண்டு வருவதில் மாநில அரசும், மத்திய அரசும் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகின்றன. சென்ற ஆட்சியில் சேலத்திற்கு ஆறு வழிச்சாலை அமைப்பது குறித்து பல்வேறு சர்ச்சைகளும், போராட்டங்களும் வெடித்தன. பரந்தூர் விஷயத்திலும் எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
எந்தவித போராட்டமும் வெற்றி பெறுவதற்கு மாநில அரசோ அல்லது மத்திய அரசோ உதவியாக இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து மக்கள் போராட்டடங்களும் தோல்வியில்தான் முடியும். பரந்தூர் விஷயத்தில் எப்படியாவது புதிய விமானநிலையத்தை அமைத்துவிடுவது என்பதில் தி.மு.கவும் பா.ஜ.கவும் ஓரணியில் நிற்கிறார்கள்.
தி.மு.கவும் பா.ஜ.கவும் தேசிய அளவில் முக்கியமான அரசியல் கட்சிகள். மாநிலத்திலும் மத்தியிலும் அதிக மெஜாரிட்டியோடு ஆட்சிப்பொறுப்பில் இருககிறார்கள். அவர்களது ஒப்புதல் இல்லாமல் பரந்தூர் புதிய விமான நிலைய விரிவாக்கத்தை தடுத்துவிட முடியாது என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.