புதிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: அறிய வேண்டிய ஒரு டஜன் தகவல்கள்!

புதிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: அறிய வேண்டிய ஒரு டஜன் தகவல்கள்!
Published on

மிழ்நாட்டின் புதிய தொழில்துறை அமைச்சராக இன்று பதவி ஏற்றிருக்கிறார் டிஆர்பி.ராஜா. அதிகம் பேருக்கு அறிமுகமில்லாத இவர் குறித்து அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு டஜன் தகவல்களைப் பார்ப்போம்…

1. டிஆர்பி.ராஜா – இவர் பெயருக்கு முன்பிருக்கும் இனிஷியலே இவருக்கு மிகப்பெரிய அடையாளம். ஆம், திமுகவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளை வகித்த டிஆர்.பாலுவின் புதல்வர்தான் ராஜா.

2. சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகில் இருக்கும் தளிக்கோட்டை. ஆனால், பிறந்தது, வளர்ந்தது, படித்தது அனைத்தும் சென்னையில்தான்.

3. உளவியல் பட்டப்படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் இவர், அந்தத் துறையிலேயே முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

4. 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த மன்னார்குடி தொகுதியின் திமுக வேட்பாளராக முதல்முறை களம் கண்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில், முதல் தேர்தலிலேயே முத்தான வெற்றி பெற்றவர் ராஜா.

5. பாரபட்சமின்றி அனைவரிடமும் சகஜமாகப் பேசும் குணமும், உதவி என்று கேட்டால் உடனே அதைச் செய்து தரும் மனமும், தொகுதி மீது இவருக்கு இருந்த அக்கரையும் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.

6. இருமுறை ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெற்றதோடு, மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் பணியாற்றியதால் இவர், டிஆர்பி எனும் தனித்த அடையாளத்துடன் வலம் வருகிறார். இதனாலேயே 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 37,393 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார் ராஜா.

7. மன்னார்குடி என்ற ஒரே தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்ற ஒரே நபர் என்ற தகுதியும் அவருக்கு தற்போது அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்தது என்றுகூடக் கூறலாம்.

8. 2016ம் ஆண்டு சட்டமன்ற விவாதத்தில் கலந்துகொண்ட இவரை நோக்கி, அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, 'மை டியர் யங் மேன்' என்று கூறி, இவரது கேள்விக்குப் பதிலளித்தது தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றது.

9. தமிழக சட்டமன்றத்தில் இவருக்குப் பத்தாண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளதால் சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவையை வழிநடத்த அறிவிக்கப்பட்டவர்களில் டி.ஆர்.பி.ராஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

10. முதல்வர் மு.க.ஸ்டாலின், டிஆர்பி ராஜாவை குழந்தை முதலே பார்த்து வருகிறார். ஸ்டாலினின் செல்லப்பிள்ளை என்றே இவரை திமுகவில் அனைவரும் கூறுவர்.

11. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிஆர்பி ராஜா திராவிட அரசியல் களத்தில் Intellectual ஆக உள்ளவர். இதன் காரணமாக அவரைத் தேடி வந்த பதவிதான் திமுகவின் ஐடி விங் செயலாளர் பொறுப்பு. இதனால் திமுகவினரின் மனநிலையும், அன்றைய ட்ரெண்ட்ங், திமுகவுக்கு ஆதரவு, எதிர்ப்பு என அனைத்தும் இவருக்கு அத்துப்படி என்றே கூறலாம்.

12. டெல்டா மாவட்டத்தைச் சார்ந்த ஒருவர் தமிழக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நெடுநாளைய விருப்பம். அதற்கு முதல்வர் ஸ்டாலினின் முத்தான தேர்வுதான் டிஆர்பி ராஜா.

இப்படித்தான் அனைத்துத் தரப்பிலும் சீனியரான டிஆர்பி ராஜாவுக்கு தற்போது அதிகாரப்பூர்வமாக தொழில் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பொறுப்பிலும் அவர் சிறந்து விளங்குவார் என்பது தமிழக மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com