வரும் கல்வியாண்டில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்!

வரும் கல்வியாண்டில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்!

பத்தாம் வகுப்பிற்கு பின்னர் பிளஸ் டுவை தவிர்த்துவிட்டு நேரடியாக இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ள விரும்புவர்களுக்கு பாலிடெக்னிக் படிப்புகள் வரப்பிரசாதமாக இருந்து வந்தன. தற்போது பாலிடெக்னிக் படிப்பில் சேரும் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த பத்தாண்டுகளில் மாணவர்களின் விருப்பப் பட்டியலில் ஏனோ பாலிடெக்னிக் இடம்பெறுவதில்லை. பொதுவாக இன்ஜினியரிங் படிப்பதில் மாணவர்கள் காட்டும் ஆர்வமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்பவர்கள் கூட கணிணி அறிவியலையே விரும்புகிறார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிளஸ் டூவை தவிர்த்துவிட்டு, பத்தாங்கிளாஸ் முடிந்ததும் பாலிடெக்னிக் சேர்ந்தவர்கள் பொறியியலில் உயர் கல்வியை தொடர முடிந்தது. மூன்றாண்டு படிப்பை முடித்தவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரமுடியும். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேரடியாக இரண்டாமாண்டு பொறியியல் படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம்.

பாலிடெக்னிக் படித்து விட்டு பொறியியல் படிப்பவர்களுக்கு இன்ஜினியரிங் பாடங்கள் எளிதாக இருக்கும். இதன் காரணமாக கூட பாலிடெக்னிக் படிக்க வந்தவர்கள் நிறைய பேர். சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் என அனைத்து துறைகளுக்கான டிப்ளோமோ பட்டங்களை பாலிடெக்னிக் மூலமாக படிக்கலாம்.

இந்தியா முழுவதும் இரண்டாயிரம் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. பாலிடெக்னிக்கில் படித்துவிட்டு வருபவர்களை பெரிய நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை என்கிற கருத்து நிலவுவதால் முன்பைப் போல் பாலிடெக்னிக்கை யாரும் நாடுவதில்லை. இன்ஜினியரிங் படித்தவர்களே சரியான வேலை கிடைக்காத சூழலில் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளை யாரும் ஏற்பதில்லை என்கிறார்கள்.

பாலிடெக்னிக் நிறுவனங்களும் முன்பைப் போல் மாணவர் சேர்க்கையிலும், சரியான ஆசிரியர்களை நியமிப்பதிலும் கவனம் செலுத்துவதில்லை. பயிற்சி தரும் ஆசிரியர்களுக்கு புதிய தொழில்நட்பம் குறித்த புரிதலும் தேர்ச்சியும் தேவைப்படுகிறது. .

ஏ.சி மெக்கானிக் படிப்புக்கான சிலபஸ் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை. நவீன தொழில்நுட்பத்தின் படி தயாராகியுள்ள ஏ.சி வகைகள், ரெப்ரிஜிரேட்டர் போன்றவற்றை மாணவர்களால் கையாள முடியாத சூழல் இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குளிர்சாதன பெட்டிகளை பழுது பார்க்கும் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், ஆர்வமுள்ளவர்களைத்தான் பார்க்க முடிவதில்லை

பாலிடெக்னிக் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்களை மாற்றியமைக்க உயர்நிலை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக உயர் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு சேர்க்க வேண்டியவை பற்றி கருத்து கேட்டு,

அதன்படி பாடத்திட்டங்களை மாற்றியமைக்கும் திட்டமிருப்பதாக செய்திகள் வருகின்றன.

நிறுவனங்களின் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைத்தால் மட்டுமே பாலிடெக்னிக் போன்ற படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புத் தருவதற்கு நிறுவனங்கள் முன்வரும். இது தவிர தமிழ்நாடு ஸ்கில் டெவலெப்மெண்ட் கார்பரேஷன் உடன் இணைந்து இறுதியாண்டு படிக்கும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com