டோக்கன் வாங்காதவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவது எப்படி?

டோக்கன் வாங்காதவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவது எப்படி?

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதில் இயந்திரக் கோளாறு, டோக்கன் வழங்கப்படவில்லை போன்ற சில குளறுபடிகள் இருந்தாலும், மேலே குறிப்பிட்ட தகுதி வாய்ந்த அனைவரும் தமிழக அரசின் இந்தப் பரிசுத் தொகுப்பை பெற முடியும்.

இது குறித்து கூட்டுறவுத்துறை செயலாளர் ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “கடந்த 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடு பூட்டப்பட்டு இருந்தோ, வீடு மாறியதாலோ அடையாளம் காண முடியாதவர்களைத் தவிர்த்து பெரும்பான்மையானவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. டோக்கன் வாங்கத் தவறியவர்கள் அருகிலுள்ள உங்கள் ரேஷன் கடைகளில் சென்று அதைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக 13ம் தேதி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும். குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் சென்று உங்கள் டோக்கனைப் பெற்று கொள்ளலாம். அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்து முடிக்கப்படும். அதனால் யாரும் பதற்றமோ, பயப்படவோ தேவையில்லை. இதில் ஏதாவது பிரச்னை என்றாலும் மாவட்ட அளவிலேயே அதை சரி செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு குறைவில்லாமல் அனைவருக்கும் கொடுக்கப்படும்.

அனைத்து ரேஷன் கடைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்படியே குறைகள் இருந்தாலும் அதை சரி செய்ய தயாராக இருக்கிறோம். 97 சதவிதம் பயோ மெட்ரிக்கில் பக்காவாக விழுந்து விடுகிறது. ஒருவேளை வயதானவர்கள் அல்லது வேறு காரணத்தினால், பயோ மெட்ரிக்கில் விழாவிட்டால், அவர்களுக்காக பிரத்யேகமாக தனி கையேடும் தயார் செய்யப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com