
தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில், பொங்கல் பரிசினை தமிழக அரசு வழங்கிவருகிறது. அதனடிப்படையில், இந்த ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 9ம் தேதி பொங்கல் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தவுடன், அனைத்து பகுதிகளிலும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப்பணமும் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் பொதுமக்கள் பெற்றுச் செல்ல வேண்டும் என்பதற்காக பொங்கல் தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன், ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. அதையடுத்து, வருகின்ற 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6மணி வரை, தினமும் 200 முதல் 300 நபர்கள் வரையிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், எந்த நாளில் எந்த நேரத்தில் கடைக்கு வந்து ரொக்கப்பணம் பெற வேண்டும் என்பதும் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சுமார் 2 கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வீடு வீடாகச் சென்று ரேஷன் ஊழியர்கள் டோக்கன் கொடுக்கும் சமயத்தில் ஒருவேளை வீடு பூட்டப்பட்டு இருந்தாலோ அல்லது அந்த நபர் வெளியூர் சென்றிருந்தாலே டோக்கன் வழங்க முடியாமல் போகிறது. இந்த காரணங்களால் டோக்கன் வாங்க முடியாமல் போய்விட்டதே... பொங்கல் தொகுப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்று எண்ணி யாரும் பயப்பட வேண்டாம்.
இவ்வாறு டோக்கன் வாங்க முடியாமல் போனவர்களும், விடுபட்டு போனவர்களும் 13ந்தேதி (வெள்ளிக்கிழமை) நேரில் அவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்து பொங்கல் தொகுப்பினை பெறலாம். அதே போல் ரேஷன் கடைக்கு வர இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள், அவர்களின் அத்தாட்சிக் கடிதத்துடன் ஒரு நபர் வந்து தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் சிவில் சப்ளை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஒருவேளை 13ம் தேதியும் பெற இயலவில்லையென்றால், பின்னர் கால அவகாசம் கொடுக்கப்படுமா என்பது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.