ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை, அவர் அவுட் ஆகிவிட்டார் - ஜெயக்குமார் அட்டாக்

ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை, அவர்   அவுட் ஆகிவிட்டார் - ஜெயக்குமார் அட்டாக்

ஓ.பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார். அவர் ஆட்டக்களத்திலேயே இல்லை, நாக் அவுட் ஆகிவிட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புகார் மனு  ஒன்றைக் கொடுத்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

சென்னை எழும்பூர் தனியார் விடுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மார்ச் மாதம் முப்பெரும் விழா நடத்த முடிவெடுத்துள்ள ஓபிஎஸ் அணி, மார்ச் மாதம் விடியல் பிறக்கும் எனத் தெரிவித்தது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "கூடுவார் கூட சேர்ந்தால் அந்தக் காற்றுதான் அடிக்கும் என்று சொல்வார்கள். விடியல் அரசு எனச் சொல்லும் திமுகவோடு சேர்வதால், இவர்களும் விடியல் நடக்கும் என்கிறார்கள். ஓபிஎஸ் திமுகவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார். அவர் இப்போது ஆட்டக் களத்திலேயே இல்லை, அவர் நாக் அவுட் ஆகிவிட்டார். அவரைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை" என்றார்.

கமலுக்கு பதிலளித்து ஜெயக்குமார் பேசுகையில், "விஸ்வரூபம் படத்தில் ஒரு சமூகம் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக இஸ்லாமியர்கள் புகார் தெரிவித்தனர். ஒரு சமூகத்தினரின் மன உணர்வுகளை புண்படுத்தி பணம் தான் முக்கியம் என்று நீங்கள் நினைத்தால், அரசாங்கம் எப்படி அதை ஏற்றுக்கொள்ள முடியும். உடனடியாக அந்த காட்சிகளை நீக்குங்கள் என படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. காட்சிகளை நீக்கிய பிறகுதான் படம் வெளியிடப்பட்டது. இப்போது இப்படிச் சொல்லும் கமல்ஹாசன், ஜெயலலிதா இருக்கும்போது இதைச் சொல்லி இருக்க வேண்டியது தானே? என்றார் ஜெயக்குமார்.

அடுத்து திமுக குறித்த கேள்விக்கு,

 ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணத்தை தண்ணீர் போல் இறைத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. 13 அமைச்சர்களும் அங்கே முகாமிட்டு பண பட்டுவாடா செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாக்காளர்களை ஆடு, மாடுகளைப் போல் அடைத்து வைத்து அவர்களுக்கு பிரியாணியும் செலவுக்கு ரூ. 500 கொடுக்கப்படுகிறது. வாக்காளர்களின் மனதை மாற்ற சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும் கேலிக்கூத்தான, கேவலமான நிகழ்வுகள் ஈரோட்டில் நடந்துக்கொண்டிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவுகின்றனர். தேர்தல் ஆணையமும் என்ன செய்வதென்று தெரியாமல் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

அதிமுக பணநாயகத்தைவிட, ஜனநாயகத்தைத்தான் நம்புகிறது.  எங்கள் ஆட்சியில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்தோம். ஆனால், தற்போது எப்படி உள்ளது. இந்த ஆட்சியில் காவல்துறை செயல்படவில்லை. அம்மா ஆட்சியில் காக்கிச்சட்டை போடுவது கெளரவமாக பார்க்கப்பட்டது. இந்த ஆட்சியில் ஏன் காக்கிச் சட்டை போடுகிறோம் என காவலர்கள் நினைக்கிறார்கள்.

மேலும் , திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் இல்லாத நாட்களே இல்லை எனலாம். தினந்தோறும் கொலை , கொள்ளை குறித்த செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. காவல்துறை என்ன செய்துக்கொண்டிருக்கிறது?

இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com