"அயலகத் தமிழர் நாள்", "தமிழர் நல வாரியம்" - முதல்வர் ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்!

"அயலகத் தமிழர் நாள்", "தமிழர் நல வாரியம்" - முதல்வர் ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்!

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் மக்களை ஒருங்கிணைப்பது, அவர்கள் மூலமாக முதலீடுகளை திரட்டுவது என்று சீரியஸாகவே களமிறங்கியிருக்கிறது, ஸ்டாலின் அரசு. வெளிநாட்டில் வாழும் தமிழர்களை தமிழ்நாட்டுடன் நெருக்கமான உறவை கொண்டு வர, அயலகத் தமிழர் நாள் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழை மறந்துவிட்ட ஒரு புதிய தலைமுறைக்கு தமிழ் பற்றியும், தமிழ்நாட்டை பற்றியும் புரிந்து கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக புலம்பெயர் தமிழர் நலவாரியம் சென்ற ஆண்டு உருவாக்கப்பட்டது.

அடுத்த தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, தமிழ்மொழி கற்றல், கற்பித்தல் தரும் நோக்கத்தில் தமிழ் பரப்புரை கழகம் ஒன்றும் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இறந்து போன தமிழர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருதல், ஊதிய நிலுவை மற்றும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருதல், மருத்துவ உதவி வேண்டுபவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

கோவிட் தொற்று காலத்திலும், உக்ரைன் போர் காரணத்தாலும் வெளிநாடுகளில் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க உதவி செய்யப்படுகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பபட்டபோது உணவுப்பொருள், மருந்து போன்ற உதவிப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் சில புதிய திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

1. தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு காலக்கட்டங்களில், புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் வாழ்ந்து வரும் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும்.

2. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும்.

3. அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிர்பாராதவிதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

4. அயல்நாடுகளுக்கு செல்வோர் குறித்த தரவுத் தளம் ஒன்று ஏற்படுத்தப்படும்

முதல்வரின் புதிய அறிவிப்புகள் கலை, கலாச்சார பண்பாட்டு தளத்தில் மட்டுமல்ல பொருளாதார ரீதியாகவும் தமிழ்நாட்டிற்கு உதவி செய்யும் என்கிறார்கள், குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் உதவிகள் அதிகம். வெளிநாட்டு வாழ் மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதால் அது சாத்தியமாகிறது.

தமிழ்நாட்டை மறந்துவிட்டு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் செட்டிலாகிவிட்ட தமிழர்களை தொழில்நுட்பத்தின் உதவியுடன் எப்போதும் இணைப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஸ்டாலின் அரசு அதை சரியாக புரிந்து கொண்டு, ஒரு முக்கியமான முன்னெடுப்பை செய்திருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com