ஆன்லைன் சூதாட்டம் - மறுபடியும் ஆளுநர் மாளிகை நோக்கி வருகிறது மசோதா!

ஆன்லைன் சூதாட்டம் - மறுபடியும் ஆளுநர் மாளிகை நோக்கி வருகிறது மசோதா!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் மசோதா ஆளுநர் மாளிகையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி வெளியானது. உண்மை நிலை என்ன? ஆளநர் என்ன விளக்கம் கேட்டார்?, தமிழக அரசு என்ன விளக்கம் கொடுத்திருக்கிறது என்பது பற்றி பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கவர்னரை சந்தித்தபோது இது குறித்து பேசி, தடை கோரும் மசோதாவை ஏற்கவேண்டும் என்று வலியுறுத்தினேன். எனவே சட்டத்தின் அவசியத்தை உணர்ந்து தமிழக அரசும், கவர்னரும் சட்டச்சிக்கல் ஏற்படாத வண்ணம், ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் அறிக்கையில் ஜி.கே. வாசன் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று கூடிய தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம், பட்ஜெட் மற்றும் புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்தது. ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்தும் விவாதிக்கப்பட்டது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி மீண்டும் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தபோது, சட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி புதிய சட்டம் இயற்றுங்கள், அதற்கு தடையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டதாகவும், அரசியல் சாசனத்தின் 34-வது பிரிவின்படி, மாநில பட்டியலில் உள்ள பொது அமைதி, பொது சுகாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு, 'பெட்டிங்' மற்றும் சூதாட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து சட்டம் இயற்றப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆன்லைன் (இணையவழி) விளையாட்டு, ஆப்லைன் (நேரடி) விளையாட்டு இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஹைலைட் செய்யப்படவேண்டும். ஆன்லைன் விளையாட்டு என்பது ஒரு சார்பான முன்தயாரிப்போடு செயல்படுத்தப்படும் விளையாட்டு என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கவேண்டும். இவற்றையெல்லாம் தமிழ்நாடு அரசு வலுவாக முன்வைத்திருக்கிறதா என்பது தெரியவில்லை என்கிறார்கள், ஆளுநரின் முடிவை ஆதரிப்பவர்கள்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் அதை முன்மாதிரியாக செய்ய விரும்புகிறோம் என்கிறார், தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சரான ரகுபதி. நியாயமான வாதம்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com