நெல்லை மேயருக்கு எதிர்ப்பு - நகராட்சித் துறை அமைச்சர் கே. என். நேரு பஞ்சாயத்து!
நெல்லை மேயருக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். மூன்று மாதங்களாக தொடரும் சர்ச்சைக்கு முடிவு கட்ட 35 தி.மு.க கவுன்சிலர்கள் கிளம்பி, திருச்சிக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடத்தி சமூகமான தீர்வு எட்டப்படும் என்று மூத்த அமைச்சர் கே.என். நேரு உறுதியளித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 51 இடங்களில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பிரம்மாண்ட வெற்றியை பெற்றன. 4 வார்டுகளில் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெற முடிந்தது. பெரும்பான்மை இடங்களைப் பெற்ற தி.மு.கவுக்கு மேயர் பதவியும் கிடைத்தது.
தி.மு.கவின் அடிமட்டத் தொண்டராக இருந்த கவுன்சிலரான சரவணன், மேயராகும் வாய்ப்பு கிடைத்தது. நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் தனக்கு நெருக்கமான ஆதரவாளரான சரவணனை மேயர் பதவிக்கு முன்னிறுத்தினார். மேயரை தேர்வு செய்யும் முதல் நாளிலயே பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. 4 அ.தி.மு.க கவுன்சிலர்களும் புறக்கணித்தார்கள். 51 கவுன்சிலர்களில் ஒரு தி.மு.க கவுன்சிலரே சரவணணை தேர்ந்தெடுக்க முன்வரவில்லை.
இந்நிலையில் 50 தி.மு.க கவுன்சிலர்களின் ஆதரவோடு மேயரான சரவணன் பதவிக்கு ஓராண்டிலேயே ஆபத்து வந்திருக்கிறது. மேயரது செயல்பாடு பற்றி தி.மு.க கவுன்சிலர்களே புகார் கூறி வந்தார்கள். நெல்லை மாநகராட்சி பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பொதுமக்களின் கோரிக்கைகளை தங்களால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேருவை அணுகியிருக்கிறார்கள்
நெல்லை மேயராக சரவணன் பதவியேற்றதும் மாநகராட்சி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலையை திறந்தார். அதுதான் அவரது ஆகப்பெரிய சாதனை என்று தி.மு.க கவுன்சிலர்களே விமர்சிக்கிறார்கள். தி,மு.கவைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவரே மாநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையின் புகார் செய்த சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
மேயர் பதவியிலிருந்து சரவணனை விலக்கிவிட்டு, வேறொருவரை மேயராக கொண்டுவரவேண்டும் என்று தி.மு.க கவுன்சிலர்களின் கோரிக்கை. பிரச்னை இருப்பது சகஜம். நெல்லை மேயர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படும் என்று அமைச்சரும் தெரிவித்திருக்கிறார். சென்ற மாதமே பிரச்னை முற்றிப்போய் அனைத்து கவுன்சிலர்களும் அமைச்சரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்கள்.
அமைச்சர் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் இல்லையென்றதும் நெல்லையிலிருந்து கிளம்பி இன்று திருச்சிக்கு வந்துவிட்டார்கள். மேயரை நீக்கிவிட்டுதான் ஊர் திரும்புவதாக கவுன்சிலர்கள் முடிவெடுத்திருப்பதாகவும் திருச்சியிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நெல்லையில் மோசமான சாலைகள், நிறைவடையாத பாதாள சாக்கடைத் திட்டம் என்றொரு பெரிய புகார் பட்டியலையே மக்கள் முன் வைக்கிறார்கள். சாக்கடை நீர் நேரடியாக தாமிரபரணியில் கலக்கிறது; பழைய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இந்நிலையில் மேயரை முன்வைத்து இன்னொரு கூவத்தூர் எபிஸோட்டை நடத்த நினைக்கிறார்கள். இதற்குத்தானா கவுன்சிலர்களை தேர்ந்தெடுத்தோம் என்று உள்ளூர்வாசிகள் அலுத்துக் கொள்கிறார்கள்.