பங்குனி உத்ஸவ திருவிழா: மயிலை கபாலீசுவரர் கோயில் அதிகார நந்தி தரிசனம்!

பங்குனி உத்ஸவ திருவிழா: மயிலை கபாலீசுவரர் கோயில் அதிகார நந்தி தரிசனம்!

சென்னை, மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை ஸ்ரீ கபாலீசுவரர் திருக்கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்ஸவ பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் பங்குனி திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி உத்ஸவ திருவிழாவின் 3ம் நாளான இன்று அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி வாகனத்தில் உத்ஸவர் திருக்காட்சி வைபவம் நடைபெற்றது. இந்தத் திருக்காட்சியில் ஸ்ரீ கபாலீசுவரர் பக்தர்கள் புடை சூழ உற்சாக நடனமாடி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். இந்த பக்தி நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வணங்கினர். அதைத் தொடர்ந்து விண்ணதிர, ‘நமச்சிவாய’ என்ற பக்தி முழக்கத்துடன் வீதியுலாயும் நடைபெற்றது.

எதிர்வரும் 3ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறவிருக்கும் தேரோட்டத்தையொட்டி காலை 7.25 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மறுநாள் 4ந்தேதி பகல் 2.45 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் எழுந்தருள, அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி வைபவமும் நடைபெற உள்ளது. அதையடுத்து 6ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி அம்பிகை திருக்கல்யாணம் மற்றும் கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. மேற்கண்ட விழா நாட்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த விழா ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com