பென்னிகுயிக் நினைவு நாள் - முல்லை பெரியாறு அணையில் அஞ்சலி செலுத்திய தென்மாவட்ட மக்கள்!

பென்னிகுயிக் நினைவு நாள் - முல்லை பெரியாறு அணையில் அஞ்சலி செலுத்திய தென்மாவட்ட மக்கள்!

தென் தமிழ்நாட்டு மக்களின் தெய்வமாக போற்றப்படும் பென்னி குயிக் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பிரிட்டிஷ்காரரான பென்னி குயிக், முல்லைப் பெரியாறு அணையை கட்டி தென் தமிழ்நாட்டு நிலங்களை பாசனப்பகுதியாக்கியதோடு, குடிநீர் பஞ்சமும் வராத அளவுக்கு தொலைநோக்குத்திட்டத்தை கொண்டு வந்தவர். அவர் பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் தமிழர்கள் நன்றியோடு நினைவு கூறுகிறார்கள்.

சென்னை அரசின் பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் செயலாளராக இருந்த ஜான் பென்னிகுவிக், மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த பெரியாறு வீணாக கடலில் கலப்பதைக் கண்டு ஒரு புதிய அணை கட்ட முடிவு செய்தார். தமிழக-கேரள மாநில எல்லையில் 1796ல் ராமநாதபுரம் சேதுபதி முயற்சித்து பார்த்து கைவிட்ட முல்லைப் பெரியாறு அணை திட்டத்தை கையிலெடுத்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது.

1895ல் ரூ.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது. திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தருவதற்கு திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒப்புக்கொள்ளவில்லை. முழுவதும பிரிட்டிஷ் அரசின் நிதியில் ஆரம்பிக்கப்பட்டது. அடர்ந்த காடு, விஷ பூச்சிகள், காட்டு விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி 3 ஆண்டுகளுக்கும் மேலாக அணை கட்டும் முயற்சி நடந்தது.

பின்னர் பெய்த மழையில் அணை உடைந்து போனது. அதன்பிறகு நிதி ஒதுக்கீடு செய்ய பிரிட்டிஷ் அரசு மறுத்துவிட்டது. லண்டனுக்கு கப்பல் ஏறிய பென்னி குயிக், தனது சொத்துகள் அனைத்தையும் விற்று அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு முல்லைப்பெரியாறு அணையை கட்டி முடித்தார். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க ஆரம்பித்தது.

பெரியாறு அணையை கட்டி முடித்த பென்னிகுவிக்கிற்கு சென்னை மாகாண பொதுப்பணித்துறை செயலாளராக இருந்திருக்கிறார். சுகாதார வாரிய தலைவராகவும் இருந்திருக்கிறார். இவரது வாழ்க்கையை தழுவி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க லிங்கா என்றொரு திரைப்படம் வெளியானது.

பென்னிகுவிக் மறைந்து இன்றோடு 112 ஆண்டுகளாகிறது. பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து அவரது சிலை முன்பு நின்று அஞ்சலி செலுத்தினர்.

லோயர்கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பென்னிகுயிக்கின் வெண்கல சிலையுடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

இங்கு பென்னிகுயிக் பயன்படுத்திய நாற்காலி, அணை கட்டுமான பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அணையின் மாதிரி தோற்றம் போன்றவை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

அணை கட்டுமான பணிக்காக லண்டனில் இருந்து பென்னிகுயிக் கொண்டு வந்த கலவை எந்திரம், அணைக்கு கட்டுமான பொருட்களை கொண்டு சென்ற இரும்பு படகு மற்றும் கட்டுமான பணிக்கு பயன்படுத்திய சில பொருட்கள் அணை பகுதியில் புதருக்குள் கிடக்கின்றன. அவற்றையும் சேகரித்து அருங்காட்சியம் அமைக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

பென்னி குயிக் நினைவாக அ.தி.மு.க அரசு ஏராளமானவற்றை செய்திருக்கிறது. இனி, தி.மு.கவின் முறை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com