இலவச வீட்டுமனை  பட்டா கேட்டு மயானத்தில் குடியேறிய மக்கள்.

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மயானத்தில் குடியேறிய மக்கள்.

ணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு அத்தியாவசியத் தேவைகள். வசிக்க இடமில்லாமல் தவிக்கும்  நலிந்தோருக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி வருவது தெரியும். அந்த இலவச வீட்டு மனைகள் வேண்டி நீண்ட வருடங்களாக் போராடி வருகின்றனர் மேட்டூரில் உள்ள ஒரு கிராம மக்கள். அரசின் கவனத்தைக் கவரும் வகையில் அவர்கள் போராட்டம் நடத்தியது எங்கு தெரியுமா? மயானத்தில் என்பதுதான் பரபரப்பான செய்தி.


      மேட்டூர் அருகே இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கிராம மக்கள் மயானத்தில்  குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி ஒன்றியம் பெரிசோரகை ஊராட்சி பூமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த மக்கள் இலவச வீட்டு மனை கேட்டு கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அதிகாரிகள் அதைக் கண்டு கொள்ளாமலும்  நடவடிக்கை எடுக்காததையும் கண்டித்து நேற்று காலை வீட்டிலிருந்து பெட்டி படுக்கைகள் மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்ட கிராம மக்கள் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு சென்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

       இது குறித்த தகவலின் பெயரில் எதுவும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க மேட்டூர் டி.எஸ்.பி விஜயகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் தாசில்தார் முத்துராஜா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களிடம்  விசாரித்தனர். அப்போது அவர்கள்  “ஒரே வீட்டில் மூன்று குடும்பத்தினர் வசித்து வருகிறோம். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தற்போது போதிய இடவசதி இன்றி தவித்து வருகிறோம். நீண்ட காலமாக போராடியும் பயனில்லை என்பதால் மயானத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று  தெரிவித்தனர்.

       பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு குடியிருக்க தகுதியான இடத்தில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்தார். இதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

       போராட்டங்களே நீதியைப் பெற்றுத் தருகிறது. அதிலும் இது போன்ற கவன ஈர்ப்பு போராட்டங்கள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்துவதுடன் அதிகாரிகளின் கவனத்துக்கும் சென்று நன்மை அளித்தால் மட்டுமே போராட்டத்தின் வெற்றி என்பதுதான் உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com