போக்சோ சட்டம். கிராமத்து  பெற்றோர்களுக்குத் தேவை விழிப்புணர்வு!

போக்சோ சட்டம். கிராமத்து பெற்றோர்களுக்குத் தேவை விழிப்புணர்வு!

ந்தியாவில் சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கொண்டு வரப்பட்டது போக்சா சட்டம். இது 2012 ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டம் பரவலாக மக்களால் அறியப்பட்டதன்  பின்னணி இதுதான். இந்தியாவில் 99.1% குற்றங்கள் பதிவு செய்யாமல் தவிர்க்கப்படுகிறது என்று 2016 ஆம் ஆண்டில் லைவ் மின்ட் இணையதள ஆய்வுகள் தெரிவித்தது. அதே நேரத்தில் காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் சிறுமிக்கு நடந்த பாலியல் வன்முறை, டெல்லியில் ஓடும் ரயிலில் நடந்த நிர்பயா பாலியல் வன்முறை, உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் மாணவிக்கு நடத்த பாலியல் வன்முறை போன்ற  சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. இதை அடுத்து சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து அனைத்து பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக பெண்களே களம் இறங்கினர்.

         இந்த நிலையில் இது போன்ற பாலியல் வன்முறை களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கொண்டு வரப்பட்டதுதான் போக்சோ சட்டம்.

பலவந்தமான  பாலியல் தாக்குதல், எல்லை மீறிய பலவந்தமான பாலியல் தாக்குதல், பாலியல்  ரீதியான தாக்குதல், எல்லை மீறிய பாலியல் தாக்குதல், பாலியல் தொந்தரவு, குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல் என்று ஆறு வகை பாலியல் குற்றங்கள் இந்த சட்டத்தின் கீழ் வருகிறது. இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவனும் சிறுமையும் இத்தகைய பாலியல் தொடர்புடைய பிரச்சினைகளை மற்றவர்களிடம் எதிர்கொண்டாலோ  அல்லது மனம், உடல் ரீதியாக பாதிக்கப்பட்டாலோ இந்த சட்டம் பாதுகாப்பு அளிக்கும் பாலியல் செயல்களுக்காக சிலர்களை கடத்தும் நபர்கள் மீதும் இந்த சட்டம் பாயும். இதேபோல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும் இந்த சட்டத்தின்படி குற்றமாகும். இதுபோன்ற திருமணங்களில் ஈடுபடும் மணமகன் மற்றும் உறவினர்கள் மீதும் இந்த சட்டம்  பாய்ந்து வருகிறது. இவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்ட வருகிறது.

    ஆனால் கிராமப்புறங்களில் இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் பெற்றோர் பலர் தங்களது மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து சிக்கலில் மாட்டிக் கொள்வதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதில் தமிழகத்தைப் பொறுத்தவரை சேலம் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் அதிக அளவில் இளைஞர்கள் இந்த சிக்கலில் மாட்டி வருவதாக சொல்லப்படுகிறது.  இது குறித்து மூத்த சட்ட ஆலோசகர்கள்  கூறியதாவது "சட்டம் குறித்த விழிப்புணர்வு நகரப் பகுதிகளில் நன்றாக உள்ளது.  ஆனால் கிராமப்புறங்களில்18 வயசுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் மட்டுமே இந்த சட்டம் தங்கள் மீது பாயும் என்ற எண்ண ஓட்டம் உள்ளது. அதே நேரத்தில் திருமணம் செய்வது தவறாகாது என்று எண்ணுவோர் அதிக அளவில் உள்ளனர். இதன் காரணமாகவே தங்களது மகன்களுக்கு உறவு முறையில் உள்ள பெண் குழந்தைகளை பூப்பெய்தியுடன் திருமணம் செய்து வைக்கின்றனர். யாருக்கும் தெரியாமல் திருமணம்  நடந்து முடிந்து கர்ப்பம் தரித்தவுடன் சிறுமிகளை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்து வருகின்றனர். அப்போது நடக்கும் விசாரணையில் மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழும அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்பவர்தான் அதிகம் உள்ளனர். தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் 70% இளைஞர் களும் அவர்களது குடும்பத்தினரும் இதுபோன்றுதான் போக்சோ வழக்குகளில் சிக்கி உள்ளனர். அதேபோல் இளம் வயதில் காதல் திருமணம் செய்துவிட்டு பெற்றோரை விட்டு ஓட்டம் பிடிக்கும் இளைஞர்களும் பிரசவ காலத்தில் வசமாக சிக்கிக் கொள்கின்றனர். சட்டம் குறித்த விழிப்புணர்வு என்பது 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின்  குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அவர்களை திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்களின் குடும்பத்திற்கும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்" என்கிறார்.

         கிராமப்புறங்களைப் பொறுத்தவரை  பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வருவதுதான் கணக்கு. பிளஸ் 2 முடித்தவுடன் அல்லது 17 வயதிலோ திருமணம் செய்து வைத்து கடமையை முடிக்க பெற்றோர் முயல்வார்கள். இதில் எதிர்ப்பு காட்டும் பெண் புகாரும் தரலாம். அதே நேரத்தில் பெற்றோருக்குக் கட்டுப்பட்டு  திருமணம் செய்த பெண்   18 வயதில்  கர்ப்பிணியாவதால்   எந்தவித சட்ட சிக்கலும் வராது என்ற எண்ணமே  பரவலாக உள்ளது. பிரசவத்திற்கும் அதை தொடர்ந்து கிடைக்கும் அரசு சலுகைகளுக்கும் அரசு மருத்துவமனையில் சேர வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். இது போன்ற சூழலில் பிரசவத்திற்கு வரும்போது மருத்துவர்கள் விசாரிக்கின்றனர். விசாரணையில் குழந்தை திருமணம் செய்தது தெரிய வருகிறது.  அந்த சிறுமியை  திருமணம் செய்த கணவர் போக்சோ  வளையத்தில் சிக்கிக் கொள்கிறார். இப்படி திருமணம் செய்யும் இளைஞர் மட்டும் அல்ல அவர் உடனிருப்பவர்கள்   மீதும் போக்சோ  சட்டம் பாயும் என்பதை உறவினர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே சட்ட வல்லுநர்கள் சொல்லும் தகவல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com