காவல்துறை எச்சரிக்கை: ஜிபே மூலமாக ஏமாற்றும் புது யுக்தி! ஏமாந்து விடாதீர்கள்

காவல்துறை எச்சரிக்கை: ஜிபே மூலமாக ஏமாற்றும் புது யுக்தி! ஏமாந்து விடாதீர்கள்

அண்ணாநகரைச் சேர்ந்த 70 வயது முதியவரான சொக்கலிங்கம் என்பவருக்கு சில தினங்களுக்கு முன் ஒரு அலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசிய நபர், தன்னை ஒரு பழ வியாபாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு முதியவரிடம், ‘ஐயா, நான் தவறுதலா நம்பர் மாத்திப் போட்டதுல என் அக்கவுண்டில் இருந்து ரூ 500 உங்க அக்கவுண்டுக்கு போயிடுச்சு. என் ஒருநாள் கூலி ஐயா அது. தயவு செய்து அந்தப்பணத்தை என் நம்பருக்கே மறுபடியும் ஜி பே மூலமா செலுத்தினீங்கன்னா புண்ணியமா போகும்!’ - என்று கெஞ்சுதலாகப் பேசியிருக்கிறார்.

முதலில் இதென்னடா சோதனை! என்று நினைத்தாலும், யாரோ ஒரு எளிய பழ வியாபாரி, ஏதோ கவனக்குறைவில் இப்படிச் செய்து விட்டார். இப்போது என்ன? மறுபடியும் அந்த 500 ரூபாயை அவரது அக்கவுண்டில் போட்டு விட்டால் பிரச்சனை தீர்ந்தது. என்று நினைத்த சொக்கலிங்கம் அந்த பழ வியாபாரியின் வேண்டுகோளுக்கு இணங்க 500 ரூபாயை மீண்டும் அவரது அக்கவுண்டுக்கு ஜி பே மூலமாகச் செலுத்தி இருக்கிறார். இவ்வளவு தான் நடந்தது.

அடுத்த நொடியில் சொக்கலிங்கத்துக்கு ஒரு எஸ் எம் எஸ் வருகிறது. உங்கள் அக்கவுண்டில் இருந்து ரூ 20,000 எடுக்கப்பட்டு விட்டது என்று. அவருக்கு குழப்பமாகி விட்டது. இப்படியெல்லாம் கூட ஏமாற்றக் கிளம்பி விட்டார்களா? ஆன்லைன் பரிவர்த்தனையில் கிடைக்கும் கேப்புகளில் எல்லாம் கிடா வெட்டுவதைப் போல இப்படியெல்லாம் ஏமாற்றத் தொடங்கினால் நவீன தொழில் நுட்பங்களைக் கையாள்வதற்கான போதிய தெளிவு இல்லாத என்னைப் போன்ற முதியவர்களின் நிலை என்ன? என்று அவர் கொதித்துப் போனார். இந்தச் சம்பவம் குறித்து அவர் சைபர் கிரைமில் புகார் அளிக்கச் செல்லும் போது தான் இதே போன்று பலரும் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

டி ஜி பி சைலேந்திர பாபு பேசுகையில், ‘இது போன்ற ஆன்லைன் குற்றச் செயல்கள் இப்போது மலிந்து வருகின்றன. பொதுமக்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது. உங்களை அலைபேசியில் அழைத்து இப்படி தவறுதலாக ஜி பே செய்து விட்டோம் என்று கூறி மிகச்சிறிய தொகை எதையாவது அவர்கள் சொல்லும் எண்ணுக்கு ஜி பே செய்யும் படி கேட்டால் உடனே எச்சரிக்கையாகி விடுங்கள். சம்மந்தப்பட்ட நபரை, உடனடியாக அருகிலிருக்கும் காவல்நிலையத்திற்கு நேரில் வரச்சொல்லி, அங்கே பணமாகவே அவர்கள் தவறுதலாக ஜி பே செய்த தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் எனச் சொல்லி அங்கு அவர்களை வரவழைத்து நேரில் பணத்தைக் கொடுத்து விடுங்கள். அவர்கள் கூறுவது உண்மை எனில் நேரில் வந்து வாங்கிச் செல்லட்டும். மாறாக அவர்கள் ஆன்லைன் ஃபிராடுலன்ஸில் ஈடுபடக்கூடிய நபர்களில் ஒருவர் எனில், தைரியமாக காவல்நிலையத்துக்கும் வரமாட்டார்கள். என்று எச்சரித்தார்.

அத்துடன் இப்பொதெல்லாம் ஜி பே முறையில் அந்த ஆப் மூலமாகவே பணம் கேட்டு லிங்க் அனுப்பும் முறையும் பின்பற்றப்படுகிறது. அறியாதவர்கள், தெரியாதவர்களிடத்தில் இருந்து அப்படி பணம் கேட்டு லிங்க் வந்தால், தயவு செய்து அந்த லிங்கை ஓப்பன் செய்ய வேண்டாம். தவறுதலாக நீங்கள் அதைத் திறந்தால் போதும் உங்களது மொத்த ஜி பே அக்கவுண்டு தகவல்களுமே திருடப்பட்டு விடும். – என்றும் அவர் எச்சரித்தார்.

தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுமக்களிடையே இது போன்ற குற்றச் சம்பவங்கள் குறித்த எச்சரிக்கையை உருவாக்க ’ திருப்பிச் செலுத்தும் சிறிய தொகையானது உங்களை பெரிய பிரச்சனையில் ஆழ்த்தி விடும்’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்கவிருப்பதாகக் கூறினார்.

ஆகவே பொதுமக்கள் இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இது போன்ற ஏமாற்று வேலைகளில் ஒருவேளை பண இழப்பு ஏற்பட்டிருந்தால் நீங்கள் புகார் அளிக்க வேண்டிய சைபர் கிரைம் ஹெல்ப் லைன் எண் 1930. என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com