
சேலம் மாவட்டம், அதிகாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா. இவருக்கும் கார்த்தி என்பவருக்கும் சென்ற ஜூன் மாதம்தான் திருமணம் நிகழ்ந்தது. இந்த நிலையில் சந்தியா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு திடீரென வாந்தி ஏற்பட்ட நிலையில், தனது வீட்டுக்கு அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் அருகே வந்து இருக்கிறார். அப்போது தன்னை அறியாமல் அவருக்கு மயக்கம் ஏற்பட, அந்தக் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து விட்டிருக்கிறார்.
சந்தியா வந்ததை யாரும் பார்க்காததால் அவர் கால்வாயில் விழந்ததை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்துதான் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு சந்தியா கழிவுநீர் கால்வாயில் விழுந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. உடனே அவரை அங்கிருந்து தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். மருத்துவமனையில் அவரை பரிசோத்தித்த அரசு மருத்துவர்கள் சந்தியா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்து உள்ளனர்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அதிகாரிப்பட்டியில் கழிவுநீர் சாக்கடைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. அந்தப் பணி முழுமை பெறாமல் கால்வாயின் மேற்பகுதி மூடப்படாமல் விடப்பட்டிருந்தது. இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதற்கு முன்பு கூட இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் இந்த கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில்தான் நான்கு மாத கர்ப்பிணி சந்தியாவின் உயிரையும் இந்த கழிவுநீர் கால்வாய் வாங்கி உள்ளது. அதிகாரிகளின் அலட்சியப்போக்கே இதுபோன்ற உயிரிழப்புகளுக்குக் காரணமாக உள்ளது என்றும் அந்த கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
சேலம் அரசு மருத்துவமனையில் சந்தியாவின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சோக சம்பவம் குறித்து அம்மாபேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கர்ப்பிணிப் பெண் சந்தியாவின் உயிரிழப்பால் அந்தப் பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.