மதம் மாறிய தலித்துகளுக்கும் சலுகை - தமிழக சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம்! மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?
கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் சலுகைகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய தன்னுடைய அரசு உறுதியாக இருப்பதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
இந்து மதத்தில் இருந்து வேறு மதம் மாறியவர்கள் பட்டியலின சாதிகளில் இணைய முடியாது என்கிற நிலை இருந்து வருகிறது. ஆனால், இந்து மதத்தில் இருந்து சீக்கிய மதத்திற்கோ பௌத்த மதத்திற்கோ மதம் மாறியவர்களை பட்டியலின மக்களாக அங்கீகரிக்கும் சட்டத் திருத்தங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களையும் பட்டியலின மக்களாக அங்கீகரிக்கும் சட்டத் திருத்தம் வரவேண்டும் என்னும் கோரிக்கை கடந்த காலங்களில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. இது குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வருவதற்கு தி.மு.க அரசு முயற்சியெடுத்திருக்கிறது.
அரசியலமைப்புச்சட்டம் தரும் உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, சமூக நீதியின் பயன்களை பெறுவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் சிறப்புத் தீர்மானத்தை இன்று அறிமுகப்படுத்தினார்.
ஆதி திராவிடர் வகுப்பினருக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமையை வழங்குவதே சரியானது. மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் ஜாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. ஜாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே ஜாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம் என்று சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், சிறப்புத் தீர்மானத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
கலைஞர் ஆட்சியின் போது பல்வேறு காலக்கட்டங்களில் இதே கோரிக்கையை முன்வைத்து பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. தி.மு.கவின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில். பட்டியலின மக்களுக்கு இணையாக கிறித்துவ ஆதிதிராவிடர்களும் சலுகைகள் பெறும் வகையில் அரசாணைகள் வெளியிட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இடஒதுக்கீடு நீங்கலாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகின்றன.
பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் அனைத்துக் கல்வி உதவித் தொகைத் திட்டங்களும் கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. முழுநேர முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில்பவர்களுக்கான ஊக்கத்தொகை, உயர்கல்வி சிறப்பு ஊக்கத் தொகை அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இடஒதுக்கீட்டையும் வழங்குவதே சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று சிறப்புத் தீர்மானத்தை முதல்வர் அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து தீர்மானத்தை ஆதரித்து உறுப்பினர்கள் பேசி வருகிறார்கள்.
ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாகவே ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறி விடுகிறார்கள் என்றும், மதம் மாறிய பின் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்று தேசிய ஆதி திராவிடர் ஆணையத் துணைத் தலைவர் சென்ற ஆண்டு அறிவித்திருக்கிறார். இது குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசின் கருத்து என்னவென்பதுதான் இன்றைய கேள்வியாக இருக்கப்போகிறது.