மாநிலக் கல்வி கொள்கை குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர் நேசன் விலகல்!

மாநிலக் கல்வி கொள்கை குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர் நேசன் விலகல்!

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் அமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை குழுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஜவகர் நேசன் விலகிக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார். பல்வேறு தலையீடுகள் இருந்த காரணத்தால் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ள காரணம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதாகவும், தமிழ்நாட்டிற்கென மாநில அளவில் ஒரு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, மாநில கல்விக் கொள்கை குழுவென்று உருவாக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

மாநில கல்விக் கொள்கை குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜவகர் நேசன் அறிவிக்கப்பட்டிருந்தார். சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக பணியாற்றி வந்தவர், பேராசிரியர் எல். ஜவஹர்நேசன். இவர் தவிர ஏராளமான கல்வியாளர்களும் குழுவில் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.

இக்குழுவில் தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, ஆசிரியர் இரா. பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்.

கல்வி சம்பந்தப்பட்ட குழுவென்றால் அதில் கல்வியாளர்களின் பங்குதான் அதிகமாக இருக்கும். ஆனால், தி.மு.க அரசு அறிவித்த கல்விக் கொள்கைக் குழுவில் கல்வியாளர்கள் தவிர விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர், எழுத்தாளர் ஆகியோர்களும் இடம் பெற்றிருந்தார்கள். இதுதான் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

எல்லோருக்கும் கல்வியை அளிப்பதுதான் தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம். அந்தக் கொள்கையிலிருந்து மாநில அரசு முரண்படாமல் தமிழகத்தில் உள்ள கல்விச் சூழலுக்கு ஏற்றபடி தனித்த கொள்கை ஒன்று உருவாக்குவது என்கிற லட்சியத்தோடுதான் குழு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், கற்றல் முறை, பாடத்திட்டங்களை முடிவு செய்வது உள்ளிட்ட விஷயங்களில் முடிவெடுக்க முடியாத

சூழல் ஏற்பட்டது என்கிறார்கள். இதில் கல்வியாளர்கள் தவிர்த்த மற்ற துறையை சேர்ந்தவர்களின் தலையீடு அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜவகர்நேசன் பணியாற்றி வந்த, குழுவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் பல்வேறு விஷயங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாகவும், இது தொடர்பாக பலமுறை முறையீட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆகவே, கனத்த இதயத்துடன் குழுவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கல்வியாளர்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததோடு கூடிய விரையில் தமிழ்நாட்டிற்கு என்று தனியாக கல்விக் கொள்கை அறிவிக்கப்படும் என்று முதல்வரே அறிவித்தபோது மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் எந்த முன்னேற்றமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com