தமிழகத்தில் 3 மினி டைடல் பார்க் கட்ட திட்டம் - தொடங்கி வைத்த முதல்வர்!

தமிழகத்தில் 3 மினி டைடல் பார்க் கட்ட திட்டம் - தொடங்கி வைத்த முதல்வர்!
Published on

தமிழகம் முழுவதும் 3 மினி டைடல் பார்க் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. அடுத்த ஆண்டுக்குள் தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் பகுதிகளில் 3 மினி டைடல் பார்க் கட்டப்படும். இன்னும் 4 இடங்களிலும் மினி டைடல் பார்க் கட்டுவதற்கான அறிவிப்புகளும் வரவிருக்கின்றன.

1996 காலகட்டத்தில் கருணாநிதி ஆட்சியில் சென்னையில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னையில் பிற இடங்களிலும் தொழில்நுட்பப் பூங்காக்கள் உருவாகின. ஆனால், மாநிலத்தின் பிற பகுதிகளில் பெரிய அளவில் பூங்காக்கள் உருவாக்கப்படவில்லை. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் சீரான வளர்ச்சி, சிறப்பான வளர்ச்சி என்னும் கோஷம் முன்னெடுக்கப்பட்டது. சென்னையைப் போலவே தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வந்தன.

தற்போது 50 ஆயிரம் சதுர அடி முதல் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் ஏழு மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இவை அனைத்தும் பெரு நகரங்களை தவிர்த்து சிறு நகரங்களில் அமைக்கப்படும்போது உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எழுந்திருக்கிறது.

முதல் கட்டமாக தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் பகுதியில் 4 ஏக்கர் பரப்பளிவ்ல 32 கோடி மதிப்பீட்டில் ஒரு மினி டைடல் பூங்காவும், தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் 30 கோடி மதிப்பீட்டில் ஒரு மினி டைடல் பூங்கா, சேலம் மாவட்டம் ஆணைகவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் பகுதியில் 29 கோடி மதிப்பீட்டில் ஒரு மினி டைடல் பூங்கா அமைக்கப்பட இருக்கின்றன.

இத்தகை மினி டைடல் பூங்காக்களில் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிளைகள் செயல்படும். இதன் மூலம் தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள பகுதிகள் சமூக, பொருளாதார வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று தலைமைச்செயலகத்தில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் கலந்து கொண்டார். உடன் அமைச்சர்கள் கே.என். நேரு, டி.ஆர்.பி ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும்,

தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையின் அமைச்சரான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஏனோ கலந்து கொள்ளவில்லை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com