சென்னையில் காதலர் தினத்தை எதிர்த்து போராட்டம்… கண்டு கொள்ளாத மாணவிகள்!
சென்னை எத்திராஜ் கல்லூரி அருகே பாரத் இந்து முன்னணி அமைப்பினர் ‘காதலர் தினத்தை’ எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
கலாச்சாரத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் சுதந்திரத்திற்காகப் போராடிய வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, ஜான்ஸி ராணி உள்ளிட்டோரின் புகைப்படம் தாங்கிய பதாகைகளை ஏந்தி பாரத் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காதலர் தின கொண்டாட்டத்தால் நம் நாட்டின் பாரம்பரியப் பெருமைகளும், கலாசாரமும் கெட்டு இளைஞர்கள் பலர் தடம் மாறிச் செல்கின்றனர்.
காதலர் தினம் போன்று வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான கொண்டாட்டங்கள் நம் இளைஞர்களுக்குத் தேவையா எனும் ரீதியில் போராட்ட அமைப்பினர் தொடர்ந்து காதலர் தினத்துக்கு எதிரான கோஷத்தை எழுப்பிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட அங்கிருந்த மாணவ மாணவிகள் அதைக் கண்டு கொள்ளாமல் சாலையில் நடந்து சென்றனர்.
இந்தக் காட்சியானது சாலையில் செல்வோரால் நகைப்புடன் பார்க்கப்பட்டது. போராட்டம் நடத்தப்படுவது என்னவோ இன்றைய இளைஞர்கள் மற்றும் யுவதிகள் காதல் என்றும் காதலர் தின கொண்டாட்டம் என்ற பெயரிலும் நமது கலாச்சாரத்தை மறந்து மேலை நாடுகளில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி மாணவர்கள் தடம் புரண்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் போராட்டம் நடத்துகிறோம் என அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் யாருக்காகப் போராடுகிறார்களோ அவர்களே அந்தப் போராட்டத்தை சட்டை செய்யாது விலகி நடந்து சென்ற காட்சி பொதுமக்களிடையே நகைப்புக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
கல்லூரியின் முன்பு திடீரென பாரத் இந்து முன்னணி அமைப்பினர் கலாச்சார காவலர்களாக அவதாரமெடுத்து இப்படி ஒரு போராட்டம் நடத்தியதைக் கண்டித்து அங்கிருந்தோர் புகார் எழுப்ப காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டக் குழுவினரை விரைந்து அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அதைத் தொடர்ந்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றதாகத் தகவல்.
முன்னறிவிப்பின்றி இது போன்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டு குழப்பம் நிலவியது. பிறகு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.