பைக் டாக்சிக்கு தடை கோரி சென்னையில் போராட்டம்!

பைக் டாக்சிக்கு தடை கோரி சென்னையில் போராட்டம்!

சென்னை, அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே அனைத்து ஆட்டோ தொழிற்சங்கம் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் இரு சக்கர வாகன பைக் டாக்ஸியை தடை செய்யக் கோரி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்டு, பைக் டாக்சியை தடை செய்ய வேண்டுமென முழக்கமிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட சிஐடியு மாநில செயல் தலைவர் பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, ’புதிய மோட்டார் வாகன சட்டத்தின் ஒரு அங்கமாக இரு சக்கர வாகன டாக்ஸியை மதுரையில் மாவட்ட ஆட்சியர் சென்ற 14ம் தேதி தடை செய்தார். அந்தத் தடையை மீறுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இதற்கு முரண்பாடாக சென்னை மெட்ரோ நிறுவனத்தில் ஐம்பது பெண்களைக் கொண்டு பைக் டாக்ஸியை அறிமுகப்படுத்தி உள்ளதைக் கண்டிக்கத்தக்கது. இரு சக்கர வாகனங்களை பைக் டாக்ஸியாக ஓட்டக்கூடாது என்று ஏற்கெனவே நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. ஏற்கெனவே டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த பைக் டாக்சியை தடை செய்துள்ளது’ என அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், ’இதுபோன்ற பயணங்களில் மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. பைக் டாக்ஸியில் செல்பவர்களுக்கு காப்பீட்டுத் திட்டமும் செயல்படுத்த முடியாது. லட்சக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்க்கையை பறிக்கும் இந்த பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்று அனைத்து சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். எங்களது கோரிக்கை மனுவை போக்குவரத்து துறை ஆணையரை சந்தித்து அளிக்க உள்ளோம்’ என அவர் கூறினார். இந்தப் போராட்டம் பைக் டாக்ஸி ஓட்டத்தை நிறுத்தும் வரை தொடரும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com