
புதுச்சேரியில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு நீண்டநாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் இருந்த புதுச்சேரியை இந்திய அரசுடன் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த போது இணைத்தார். அதையடுத்து புதுச்சேரி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது. அந்த வகையில் புதுச்சேரியின் முழு அதிகாரமும் துணைநிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் உள்ளது.
தற்போது புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மாநில நிர்வாகம் ஸ்தம்பித்திருப்பதாக புதுச்சேரி மாநில கழக செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
இதையடுத்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அதிகாலையில் புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கும் நிலையில், அன்பழகன் கைது செய்யப்பட்ட விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.