தனியார் மயமாகும் பொதுக்கழிப்பறைகள் - இனி பொதுக்கழிப்பறை பக்கம் தாராளமாக ஒதுங்கலாம்!
சென்னை மாநகரம் முழுவதும் உள்ள பொதுக்கழிப்பறைகளை நிர்வகிக்க தனியார் நிறுவனங்களை அணுகியிருக்கிறது, சென்னை மாநகராட்சி. இது குறித்து சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே தீர்மானம் இயற்றப்பட்டிருப்பதாகவும், வரும் மார்ச் மாதத்திற்குள் செயல்பட ஆரம்பிக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
சென்னை முழுவதுமுள்ள 888 பொதுக்கழிப்பறைகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்க உள்ளன. இதில் பெரும்பாலான பொதுக்கழிப்பறைகள் நிர்வகிக்க முடியாமல் செயலற்ற நிலையில் இருக்கின்றன. இவை அனைத்தையும் பராமரிக்க தனியார் நிறுவனங்கள் களமிறங்குகின்றன.
தனியார் நிறுவனங்கள் வசம் பொதுக்கழிப்பறைகள் ஒப்படைக்கப்பட்டாலும் அவை இலவச கழிப்பறைகளாகவே செயல்படும். கட்டணக் கழிப்பறையாக மாற்றும் திட்டம் இல்லை என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் இதையொரு சேவையாக முன்னெடுக்க விரும்புகின்றன.
சென்னை மாநகரம் முழுவதும் ஏறக்குறைய 100 கழிப்பறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் உள்ள கழிப்பறைகள். இவை அனைத்தும் 24 மணிநேரமும் செயல்படும் அளவில் தனியார் நிறுவனங்கள் பராமரிக்கப்பட இருக்கின்றன.
தனியார் நிறுவனங்கள் எட்டு ஆண்டுகள் வரை பொதுக்கழிப்பறைகளை பராமரிக்கும். இதற்கான செலவுகளை சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும். கழிப்பறை வளாகங்களில் விளம்பரங்கள் செய்யவும் சென்னை மாநகராட்சி அனுமதி வழங்க இருக்கிறது. அதிலிருந்து பெறப்படும் நிதி வருவாய், பொதுக்கழிப்பறைகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுக்கழிப்பறைகளில் சிலவற்றையும் ஆறு மாத காலங்களுக்கு தனியார் வசம் ஒப்படைக்க இருக்கிறார்கள். பகல் நேரத்தில் மாநகராட்சி ஊழியர்களின் பராமரிப்பிலும், இரவு நேரங்களில் தனியார் நிறுவன ஊழியர்களும் இணைந்து கழிப்பிடங்களை பராமரிக்க இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது.
இனி சென்னைவாசிகள் கழிப்பிடம் தேடி ஹோட்டல், பெட்ரோல் பங்க் பக்கம் தேட வேண்டியதில்லை. பொதுக்கழிப்பறை பக்கம் தாராளமாக ஒதுங்கமுடியும்!