
வைகை அணை திறக்கப்பட்டதால் மதுரை திருப்பரங்குன்றத்திலுள்ள தென்கால் கண்மாய் அணை, நீரால் நிரம்பி காட்சியளிக்கிறது. இக்கண்மாயில் மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் மலைபாம்பு ஒன்று சிக்கியிருந்தது. இதைப் பார்த்த அவ்வூர் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
மதுரை தென்கால் கண்மாய்க்கு அருகே உள்ள விளாச்சேரி, முனியாண்டிபுரம் பகுதி மக்கள் கண்மாய் பகுதியில் தினந்தோறும் வலை விரித்து தங்களுக்குத் தேவையான மீன் பிடித்து வந்துள்ளனர்.
தினந்தோறும் மாலை வேலைகளில் அணை நீருக்குள் வலையை விரித்து வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். மறுநாள் காலை வந்த வலையை எடுத்து அதில் சிக்கிய மீன்களை எடுத்துக்கொண்டு செல்வார்கள். இப்படித்தான் அவர்கள் தினந்தோறும் மீன்பிடித்து வந்துள்ளனர்.
இதேபோல் செவ்வாய்கிழமை மாலை மீன் பிடிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கண்மாய்க்குள் வலை விரித்து வைத்துள்ளனர். அடுத்தநாள் புதன் கிழமையன்று காலை வழக்கம் போல் வலையில் உள்ள மீன்களை எடுப்பதற்காக வலையை மேல் நோக்கி இழுத்த போது வலைக்குள் 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கி உள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், பாம்பையே பார்த்து கொண்டிருந்துள்ளனர். மலைப்பாம்பு சிக்கிய தகவல் காட்டு தீயாய் பரவ அப்பகுதி மக்கள் மலைப்பாம்பை காண கண்மாயில் கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
அதனைத் தொடர்ந்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான சமூக ஆர்வலர் சகாதேவன் என்பவருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சகாதேவன் வலையில் இருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டார். வனத்துறைக்கு தகவல் அளித்து மலைப்பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள மலைப்பகுதியில் பாம்பை கொண்டு விட்டனர்.
இதேபோல் கடந்த மாதமும் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டி பகுதியில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியது.
மீனுக்காக விரித்த வலையில் மலைப்பாம்பு சிக்கிய சம்பவம் விளாச்சேரி, முனியாண்டிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வைகை ஆற்றில் தொடர்ந்து நீர் திறப்பு இருப்பதால் வைகை அணையில் இருந்து மலைப்பாம்பு வந்திருக்கலாம் எனவும் மேலும் அதிகளவில் மலைப்பாம்புகள் இப்பகுதியில் இருக்கலாம் எனவும் சமூக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இனி கண்மாயில் மீன்பிடிக்க செல்பவர்கள் கவனமா இருக்கும்படி வனத்துறையினர் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.