சென்னையில் மழை - தமிழகம் முழுவதும் லேசான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் மழை - தமிழகம் முழுவதும் லேசான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் வார இறுதியான நேற்றும் முன்தினமும் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் கடுமையான கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை வாசிகளுக்கு எதிர்பாராத மழை மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. குன்றத்தூர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரமும் சைதாப்பேட்டை டி.நகர் போன்ற பகுதிகளில் அரைமணிநேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் 35 டிகிரிக்கும் மேலாக வெயில் அதிகமாக இருந்த நிலையில் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பநிலை சற்றே குறைந்தது.

சனிக்கிழமை வரை வழக்கம்போல் வெயில் கடுமையாக இருந்தது. பின்னர் வானில் கருமேகங்கள் ஒன்று கூடியதால் மிதமான மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையினால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் பாய்ந்து ஓடியது. இதனால் பெரும்பாலான இடங்களில் கோடையின் தாக்கம் தணிந்து, குளுமையான காற்றை பெற முடிந்தது.

சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் பல இடங்களில் வார இறுதியில் மழை பெய்திருக்கிறது. சென்ற வாரம் தமிழகம் முழுவதும் குறிப்பாக கரூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் கரூர் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு மணி நேரம் நேற்று மழை கொட்டித் தீர்த்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டிவிடும். சென்னை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுவது வழக்கம். இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெய்யில் ஆரம்பித்துவிட்டது. மார்ச் மாதம் தொடக்கத்திலேயே பல இடங்களில் 100 டிகிரியை எட்டிவிட்டது.

இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அக்னி நட்சத்திரம் ஆரம்பமாவதற்கு முன்பே வெயில் அதிகமா இருப்பதால் சென்னை வாசிகள் திணறி வருகிறார்கள். இந்நிலையில் மழை இன்னும் சில நாட்கள் தொடரும்போது கோடையின் கடுமை தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com