சென்னையில் இனி வரும் பருவ மழைக் காலங்களில் மழைநீர் தேங்காது

சென்னையில் இனி வரும் பருவ மழைக் காலங்களில் மழைநீர் தேங்காது

வடகிழக்கு பருவ மழை காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை மாநகராட்சி பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக ரிப்பன் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் பாதிப்பின் போது சிறப்பாக பணியாற்றிய 39 நபர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,

2021-ஆம் ஆண்டு நமது அரசு பொறுப்பேற்றதும் பருவமழையின் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் முதல்வர் என்ற முறையில் பல முறை நேரடியாக பார்வையிட்டு, ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, அந்த இடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். அதேபோல, அமைச்சர்களும் எந்த அளவிற்கு பணியாற்றினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இதையெல்லாம் பார்த்த காரணத்தினால், இனி வரக்கூடிய காலக்கட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து சென்னை மாநகருக்கு நிரந்தரத் தீர்வினை உருவாக்க வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்தோம்.

கொரோனா மற்றும் மிகப்பெரிய மழை பாதிப்பை வென்றுள்ளதாகவும், இந்த இரண்டு சாதனைக்காக மக்களிடையே பாராட்டு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த மழையுடன் இந்த பருவ மழை பாதிப்பை ஒப்பிட்டு மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டியதை பார்த்து அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

 கடந்த முறை ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை ஒப்பிட்டு ஊடகங்களும் பாராட்டின. மழைக் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் காவல்துறையை சேர்ந்த பணியாளர்களின் பணி பாராட்டுக்குரியது.

2021-ஆம் ஆண்டு பருவமழையின்போது பெற்ற அனுபவத்தைக் கொண்டு, உடனடியாக நாம் எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறுகிய காலத்தில் செய்து முடித்தோம். அதன் பயனை 2022-ஆம் ஆண்டு பருவமழையின்போது கண்கூடாகப் பார்த்தோம். இனிவரும் ஆண்டுகளில், மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழைக் காலங்களை சென்னை வாழ் மக்கள் நிச்சயமாக பார்க்க இருக்கிறார்கள். இந்த அரசு மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.

இப்பணியானது மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.254.67 கோடியில் 57 கி.மீ., வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.291.6 கோடியில் 107.57 கி.மீ., உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 26.28 கோடியில் 10 கி.மீ., மூலதன நிதி ரூ.7.41 கோடியில் ஒரு கி.மீ., ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியில் கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதிகளில் ரூ.3,220 கோடியில் 769 கி.மீ., ஜெர்மனி வங்கி நிதி உதவியில் கோவளம் வடிநிலப் பகுதிகளில் ரூ.1,714 கோடியில் 360 கி.மீ. மற்றும் உலக வங்கி நிதி உதவியில் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கி.மீ., தூரத்துக்கு வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாகப் பணியாற்றிய 586 பேரில் 44 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தார்.

அதைத்தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி ஊழியர், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தெற்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மதிய உணவு அருந்தினார்.

  நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com