ராஜராஜ சோழன் வெளியிட்ட 'ஈழ கருங்காசு' நாணயம்! தமிழக அரசுப் பள்ளி ஆசிரியரின் தொல்லியல் ஆய்வுத் திறனுக்கு கிடைத்த பரிசு!
எனது இந்த கண்டுபிடிப்புக்கு மாநில அரசு வழங்கிய தொல்லியல் பயிற்சியே காரணம் - பெருமிதத்துடன் கூறுகிறார் அரசுப் பள்ளி வரலாற்று ஆசிரியரான செல்வம்.
அவரது பெருமிதத்துக்கு காரணமான அந்தக் கண்டுபிடிப்பு ஒரு பண்டைய நாணயம்.
இந்த நாணயம் 12 ஆண்டுகளுக்கு முன்பு இளந்திரை கொண்டானைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது வரலாற்று ஆசிரியரான செல்வத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது. மாணவருக்கு அந்தக் காசு எப்படிக் கிடைத்தது என்பது குறித்து மேலதிகத் தகவல் இல்லை. ஆனால், கிடைத்த அந்த செப்பு நாணயம் ராஜராஜ சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான 'ஈழ கருங்காசு' என மம்சாபுரம் சிவந்திப்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியின் வரலாற்று ஆசிரியர் செல்வம் அறிந்துள்ளமை தான் இன்றைய ஹைலைட்.
நாணயத்தின் ஒரு பக்கத்தில், ஒரு மனிதன் கையில் பூவை வைத்திருப்பதைக் காணலாம். அவரது இடதுபுறத்தில் நான்கு வட்டங்களும் ஒரு சங்கும் உள்ளன. நாணயத்தின் மேற்புறத்தில் ஒரு பிறை மற்றும் கீழே ஒரு பூ உள்ளது. வலதுபுறம் திரிசூலமும் தீபமும் காணப்படுகின்றன. மறுபுறம் ஒருவன் கையில் சங்கு ஏந்தி அமர்ந்திருக்கிறான். அவரது இடது கைக்கு அருகில் தேவநாகரி எழுத்தில் ‘ஸ்ரீராஜராஜா’ எழுதப்பட்டுள்ளது.
தன்னிடம் இருந்த நாணயத்தின் அருமையை ஆசிரியர் செல்வம் அறிய நேர்ந்தது எப்படி?
மதுரையில் ஆசிரியர்களுக்கான தொல்லியல் துறை முதல் கட்டப் பயிற்சி மார்ச் 6ம் தேதி நடந்தது. பயிற்சிக்குப் பின் தனக்கு கிடைத்த தொல்லியல் அறிவைக் கொண்டு, செல்வம் தன்னிடம் இருந்த நாணயம் முதலாம் ராஜராஜ சோழனால் வெளியிடப்பட்டது என்பதை ஆராய்ச்சி மூலமாகக் கண்டறிந்தார். ”தமிழக அரசால் எனக்கு வழங்கப்பட்ட தொல்லியல் பயிற்சியின் மூலம் இந்த நாணயத்தின் சிறப்பை நான் அறிந்து கொண்டேன். இது தொல்லியல் ஆராய்ச்சியில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பயிற்சியை ஒருங்கிணைத்த திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வி.ராஜகுரு பேசுகையில், வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த ஆய்வில் நாணயங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. “அரசர்கள் தங்கள் போர் வெற்றிகளைக் கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டனர். முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர் இந்த நாணயங்களை வெளியிட்டான். இந்த நாணயங்கள் முதலாம் இராஜராஜ சோழன் முதல் முதலாம் குலோத்துங்க சோழன் வரையிலும் பயன்பாட்டில் இருந்தன. அன்றைய காலத்தில் தங்கம், வெள்ளி மற்றும் செம்பு ஆகிய உலோகங்களைப் பயன்படுத்தி சோழ அரசர்கள் நாணயங்களை வெளியிட்டனர் என்பது வரலாற்று உண்மை. இப்போது ஆசிரியர் செல்வத்திடம் இருப்பது தாமிரத்தில் உள்ள ஈழ நாணயம் . இது ‘ஈழ கருங்காசு’ (கருப்பு நாணயம்) என்று அழைக்கப்படுகிறது,” என்று கூறினார்.
அரசு வழங்கிய தொல்லியல் பயிற்சியை ஏதோ கடனே என்று கவனித்து விட்டு நேரத்தைப் போக்கும் பலருக்கு மத்தியில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் திறன்மிக்க வகையில் பயன்படுத்திக் கொண்டு அதை சிறப்பாக வெளிப்படுத்திய இந்த போக்கு பாராட்டுதலுக்குரியது.
இதன் மூலம் மேலும் பல ஆசிரியர்களும், மாணவர்களும் கூட தொல்லியல் துறை ஆய்வுகளிலும், பயிற்சிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள் என நம்பலாம்.