ரமதான் விருந்தாக சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 5 ஒட்டகங்கள் மீட்பு!
ரமதானை முன்னிட்டு உணவாகப் பயன்படுத்தும் நோக்கில் சூலகிரிக்கு கொண்டு வரப்பட்டிருந்த 5 ஒட்டகங்கள் மீட்க்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப் பட்டன. இறைச்சிக்காக் ஒட்டகங்களை வாங்கி தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு அவர்கள் தற்போது காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளனர் என்பதாகத் தகவல். இது குறித்துப் பேசுகையில் விலங்குகள் நல தன்னார்வலர் ரித்திகா கோயல், கடந்த ஆண்டு இதே போல ரமதானில் விருந்தாவதற்கு என்றே சென்னைக்கு கொண்டு வரப்பட்ட மொத்தம் 22 ஒட்டகங்களில் 20 ஒட்டகங்கள் மீண்டும் ராஜஸ்தானுக்கே திருப்பி அனுப்பப்பட்டதாகவும் , இரண்டு ஒட்டகங்கள் மட்டும் சென்னையில் இருக்கும் தங்குமிடம் ஒன்றில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், இந்தியாவைப் பொருத்தவரை ஒட்டக இறைச்சி FSSAI இன் கீழ் சான்றளிக்கப்பட்ட இறைச்சி அல்ல. ஒட்டகங்களை இறைச்சிக்காக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு கொண்டு செல்வது சட்டவிரோதமானது. ஆனால், ஆண்டுதோறும் ராஜஸ்தானில் இருந்து மிக அதிக அளவில் ஒட்டகங்கள் கொல்கத்தாவுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படுகின்றன.சூலகிரி தான் ஒட்டக விற்பனையின் ஹாட்ஸ்பாட். அங்கிருந்து ஆண்டு தோறும் பல ஒட்டகங்களை நாங்கள் மீட்டு அனுப்புகிறோம். இப்போது பிடிபட்ட 5 ஒட்டகங்களுமே ஆண் ஒட்டகங்கள். தொடர்ந்து பட்டிணியுடன் பயணப்பட்டதால் பார்ப்பதற்கு மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அந்த ஒட்டகங்கள் நீண்ட தூரம் நடந்ததால் கால்களில் காயங்களுடன் இருந்தன என்று தெரிவித்தார்.