செருப்பே தடயம்… காவலர்களின்  சமயோசிதம்!

செருப்பே தடயம்… காவலர்களின் சமயோசிதம்!

மீப காலமாக யூடியூப், சினிமா பார்த்துக் கொள்ளை மற்றும் பிற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர். இதில் தடயங்களை விட்டுச்சென்று திறமையான நம்  காவலர்களிடம் மாட்டி சிறைக்குச் செல்வோரும் உண்டு. அவ்வளவு ஏன்? கொள்ளை அடிக்க வந்த இடத்தில் தூங்கியதால் மாட்டிகொண்ட திருடரும் உண்டு. இதோ கொள்ளைக்குப் போன இடத்தில் செருப்பை விட்டுச்சென்றதால் பிடிபட்டவர்களை இந்த செய்தியில் காணலாம்.  

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் அந்தப்பகுதியைச் சேர்ந்த கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்தியா பேங்க் ஏடிஎம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஏராளமான கிராம மக்கள் தங்களின் அவசரத் தேவைக்காக பணம் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள் மூன்று பேர் ஏடிஎம் மையத்துக்குள் புகுந்து  அங்கிருந்த  ஏடிஎம் எந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தை திருட முயன்று உள்ளனர். அப்போது தீவட்டிப்பட்டி பெண் காவலர்களான தெய்வராணி மற்றும் நர்மதா ஆகியோர் ரோந்து வந்துள்ளனர். இவர்கள் வருவதைப்  பார்த்த கொள்ளையர்கள் மூன்று பேரில் இரண்டு பேர் உஷாராக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். மற்றொருவர் ஊருக்குள் ஓடித் தப்பி சென்றார்.

இதனிடையே இவர்கள் ஓடுவதைப் பார்த்து சந்தேகமடைந்த பெண் காவலர்கள்  ஏடிஎம்மிற்குள் சென்று பார்த்தபோது அங்கு கடப்பாறை மற்றும் ஒரு ஜோடி செருப்பு ஆகியவற்றை கொள்ளையர்கள் விட்டு சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும்  பயிற்சி இன்ஸ்பெக்டரான  செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர் துரிதமாக  செயல்பட்டு தீவட்டிப்பட்டி ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை செல்போனில் தொடர்பு கொண்டு அந்தப் பகுதியில் செருப்பு இல்லாமல் யாராவது வந்தால் உடனே தகவல் கொடுக்குமாறு கூறினார்.

மேலும் தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்துக்கு சக  காவலர்  சந்திரனுடன் பயிற்சி இன்ஸ்பெக்டர் சென்றபோது அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில்  நின்று கொண்டிருந்த ஓட்டுனர் சந்தோஷ் என்பவர் செருப்பு இல்லாமல் அந்த வழியாக ஒருவர் சென்றது குறித்து அவரிடம்  கூறினார். உடனே சந்தோஷ்  கூறிய இடத்திற்கு சாதாரண உடையில்  சென்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை பார்த்து செருப்பு போடாமல் நின்ற வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். அவரை துரத்தி சென்ற செந்தில்குமார் தீவட்டிப்பட்டி ஏரிப் பகுதியில் தகவல் தந்து வந்த காவலர்கள்  உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தார். இதில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் சேலம் குகை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் அவர் என்பதும் நண்பர் களுடன் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது மற்றொரு கூட்டாளி ஏற்காடு கொளகூர் பகுதியில் சேர்ந்த லட்சுமணன் என்பதை அறிந்து  அவரையும் அதே பகுதியில் மடக்கிப் பிடித்தனர். அதே நேரத்தில் தலைமறைவான மற்றொருவரை காவலர்கள்  தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிலையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்  செந்தில்குமார், காவலர் சந்திரன், சமயோசிதமாக நிலையத்திற்குத் தகவல் தந்த பெண் ரோந்துக் காவலர்கள் தெய்வராணி, நர்மதா மற்றும்  செருப்பு அணியாமல் சென்றவர் குறித்து சரியான  தகவல் கொடுத்த ஆட்டோ ஓட்டுனர்  சந்தோஷ் ஆகியோரை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். 

காட்டிக் கொடுத்தது ஒரு ஜதை செருப்பு!

பிடித்துத் தந்தது காவல்துறையினர் பணிப் பொறுப்பு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com