சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா - தி.மு.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் தனித்தனியாக சிறப்புக்கூட்டத்திற்கு ஏற்பாடு!

சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா - தி.மு.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் தனித்தனியாக சிறப்புக்கூட்டத்திற்கு ஏற்பாடு!

தி.மு.க மட்டுமல்ல அ.தி.மு.கவிலும் முக்கிய பெண் தலைவராக இருந்த சத்தியவாணி முத்து அம்மையாரின் நூற்றாண்டு பிறந்த நாளை தி.மு.க சிறப்புடன் கொண்டாடவிருக்கிறது. தி.மு.கவின் மகளிர் அணி சார்பில் சிறப்புக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதே போல் ஒரு கூட்டத்தை விடுதலைச்சிறுத்தைகளும் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.

முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட கழகத்தின் முக்கியமான தலித் தலைவருமான அன்னை சத்தியவாணி முத்து அம்மையாரின் சலியா உழைப்பையும் உறுதியையும் பாராட்டுவதாக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். சத்தியவாணி முத்து குறித்த நினைவலைகளை திருமாளவனும் பகிர்ந்திருக்கிறார்.

ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த சத்தியவாணி முத்து, இந்திப் போராட்டத்தின் போது கர்ப்பிணியாக இருந்தார். அப்போது முதல்வராக இருந்த ராஜாஜியின் வீட்டு காம்பவுண்டு சுவரில் இந்தியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திருமாவளவன் நினைவு கூர்ந்தார். கூடவே, சத்தியவாணியின் அரசியல் நிலைப்பாடு பற்றியும் பேசினார்.

திராவிட இயக்கத்திலிருந்து அவர் வெளியேறவில்லை. தி.மு.கவிலிருந்து வெளியேறியதும் அவர் நேரடியாக அ.தி.மு.கவிலும் சேரவில்லை. தலித் மக்களுக்கென்று தனிக்கட்சியை ஆரம்பித்து ஐந்தாண்டுகள் வரை நடத்தினார். தலித் மக்களை ஓரணியில் திரட்ட முயன்றார். அது முடியாதபோது, கட்சியை அ.தி.மு.கவில் இணைத்துவிட்டார்.

தி.மு.கவிலிருந்து வெளியேறி எம்.ஜி,ஆர் தலைமையில் இயங்குவதாக அவர் முடிவெடுத்திருந்தால் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது அ.தி.மு.கவில் இணைந்திருப்பார். ஆனால், தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக போராட நினைத்தார். தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தும் தலித் மக்கள் முன்னேற்றத்திற்கு தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிற காரணத்தால்தான் தி.மு.கவிலிருந்து விலகினார்

சத்தியவாணி முத்துவின் பேச்சுக்கள், எழுத்துக்களை மக்களுக்கு எடுத்துச் செல்லப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்திருக்கிறது. தி.மு.கவில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து, அமைச்சராக இருந்தாலும், அ.தி.மு.கவில் இணைந்த பின்னரும் செல்வாக்கோடு மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

முதல்முறையாக தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது அண்ணாதுரை தலைமையிலான அரசில் செய்தித்துறை அமைச்சராகவும், பின்னாளில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் சத்தியவாணி முத்து பணியாற்றியிருக்கிறார்.

தி.மு.கவின் முதல் சட்டமன்ற உறுப்பினராகவும், மத்தியில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஆகவேதான் விடுதலை சிறுத்தைகளோடு தி.மு.கவும் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது. அ.தி.மு.க என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com