அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த பள்ளி ஆசிரியர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த பள்ளி ஆசிரியர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே செம்மாம்பாளையத்தை சேர்ந்த ஜெகதீசன் என்பவரிடம் அவருடைய இரு மகன்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக இளங்கோவன் என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

 ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 50). இவருடைய 2 மகன்களும் அரசு பணியில் சேருவதற்காக பவானியில் உள்ள ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்துள்ளனர்.

அந்த மையத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கோகுலர் வீதியை சேர்ந்த இளங்கோவன் (53) என்பவர் வகுப்பு நடத்தி வந்துள்ளார்.

இளங்கோவன் பரமக்குடியில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் ஆசிரியராக பணியில் உள்ளார். பவானியில் உள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையம் ஒன்றில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். ஜெகதீசனும் அடிக்கடி பயிற்சி மையத்துக்கு வந்து சென்றதால், இளங்கோவனை சந்தித்து பேசி உள்ளார்.

அப்போது இளங்கோவன், தனக்கு அரசு உயர் அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக பல இளைஞர்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுத்ததாகவும் ஜெகதீசனிடம் கூறி உள்ளார். மேலும், ஜெகதீசனிடம் 2 மகன்களையும் அரசு வேலையில் சேர்த்து விடுவதாக கூறி நம்ப வைத்து உள்ளார். இதையடுத்து ஜெகதீசன் அவரிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்து உள்ளார்.

 பணத்தைப் பெற்றுக்கொண்டபின் அரசு வேலை குறித்து கேட்கும்போதெல்லாம் ஏதாவது பதில் சொல்லி ஏமாற்றி வந்துள்ளார் இளங்கோவன்.

இதனால் சந்தேகம் அடைந்த ஜெகதீசன் போலீஸில் புகார் அளித்துள்ளார். பரமக்குடி போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதன்பிறகு இந்த வழக்கு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இளங்கோவனை கைது செய்தார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 10-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.80 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com